October 24, 2026

எலுமிச்சையில் காணப்படும் சொறிநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

எலுமிச்சையில் பாக்டீரியா சொறிநோய் :

அறிகுறிகள் :
இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இலைத்துளைகள், செடிகளில் ஏற்படும் காயங்கள் வழியாக நுழைகிறது.
இலைகள், காய் மற்றும் தண்டுகளில் நுழைந்து அதன் பகுதியை உண்ண ஆரம்பித்து பின்னர் இனப்பெருக்கமடைந்து நிலை கொள்கிறது.
பொதுவாக இலைகளில் சற்று உயர்ந்த வட்ட வடிவில் அல்லது ஓவல் வடிவத்தில் சொறி போன்ற புண்களை தோற்றுவிக்கிறது. முதிர்ச்சி அடைந்த புண்கள் சற்று பெரியதாகவும், அதனை சுற்றி வெண்ணிற / மஞ்சள் நிற விளிம்புகள் காணப்படும்.
பழங்களும் இவ்வகை பாக்டீரியாவால் பாதிப்படைகிறது. பழங்களில் காணப்படும் புண்களால் சந்தை மதிப்பு குறைகிறது. ஆனால் சொறி போன்ற புண்கள் மேலோட்டமானவை மட்டுமே. இதனால் சதை பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்கள் இரண்டுமே முதிர்ச்சியடையும் முன்பே உதிரும்.
பாதிக்கப்படும் இலைகள் சிதைந்து உதிர்வதால் பூ பிடிக்கும் திறன் குறைந்து மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
இலைகள், தண்டுகள் மற்றும் கிளைகளிலும் சொறிபுண்கள் காணப்படுகிறது. இவை நீள் வடிவ தோற்றத்தில் இருக்கும்.

பாதிப்புக்கு உகந்த நிலை :

சற்று சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை இதன் தாக்கத்திற்கு உகந்தது. (25-30•C).
அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு பாக்டீரியா தாக்குவதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
மழைநீர் இதன் பரவுதலுக்கு உதவுகிறது.
மழை, பணி அல்லது நீர் பாசனத்தால் செடிகளில் ஏற்படும் நீடித்த ஈரத்தன்மை பாக்டீரியா செடிகளில் நுழைவதற்கு ஏற்புடையதாகும்.
எலுமிச்சை மிகவும் பாதிக்கக்கூடிய இனமாகும்.
பராமரிப்பற்ற செடிகள், மிதமான காற்று, மிதமான ஈரப்பதம், அடர் நடவு ஆகியவை நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலைகள்.
மகசூல் இழப்பீடு 10-30% வரை ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள், உதிர்ந்த இலை, பழங்கள் மற்றும் சிறு தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
நன்கு இடைவெளி இட்டு நடுவதால் போதுமான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கப்பெறுவதால் இந்நோயின் தாக்குதல் குறையும்.
நோய்த் தாக்குதல் இல்லாத செடிகளை தேர்வு செய்து நடுதல் மிகவும் அவசியமாகும்.
கவாத்து சரியான முறையில் மேற்கொள்ளப்படும் செடிகளில் நோய்த் தாக்குதல் மிகவும் குறைவாகவே காண்பது குறிப்பிடத்தக்கது.
இந்நோய் தாக்குதலுக்கு தாங்கி வளரக் கூடிய PKM -1 இரகத்தினை பயிரிடலாம்.
காப்பர் ஆக்ஸி குளோரைடு -25 கி/ லிட்டர் தண்ணீர் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு -1 கி/ லிட்டர் தண்ணீர் + Streptomycin – 0.2 கி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
NSKE – 5% தெளிக்கலாம்.
கவாத்து மேற்கொண்டு பின்னர் Pseudomonas (0.5%) தெளிப்பதால் நோய் பரவுதல் தடுக்கப்படும்.

R.V. நம்பிஷோபனா
தோட்டக்கலை உதவி இயக்குநர்
திண்டுக்கல்

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்…