இயற்கை விவசாயம் குறித்து பரவலாக அறியப்பட்டு வருகிறது. இயற்கை விவசாய முறையில் விளையும் நெல் மற்றும் காய்கறிகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். உடல் நலனுக்கு உகந்தது எனக் கருதி விவசாயிகளும் பாரம்பரிய விவசாய முறையில் இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இயற்கை விவசாயி திரு.ம.வேலு. இவர் ஹைதராபாத்துக்குச் சென்று, அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று புதிய நடவு முறைகளைக் கற்றுவந்து, தமது வயலில் செயல்படுத்தியுள்ளார். மேலும், இயற்கை விவசாயத்தை திறம்படச் செயல்படுத்தி வரும் இவரது செயல்பாடுகளைப் பாராட்டி, வேளாண் அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இவரை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலை ஊராட்சியைச் சேர்ந்தவர் திரு.ம.வேலு. வயது 55. 9-வது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை திரு.மலையாண்டி. 1981 முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பின்பற்றி வருகிறார். இவருக்கு உறுதுணையாக மனைவி, மற்றும் மகன்கள் உள்ளனர்.
அரிமளம் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வம்பன் கே.வி.கே. அதிகாரிகள் ஆகியோரின் அறிவுரைகள், ஆலோசனைகளைக் கேட்டு இயற்கை விவசாயத்தை சிறந்த முறையில் செய்து வருகிறார் திரு.வேலு. அரிமழம் வேளாண் உதவி இயக்குநர் திரு.பாண்டி ஆலோசனைகள் வழங்கி வருவதாகக் கூறுகிறார் திரு.வேலு.
இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்களைப் பயிரிட்டுவரும் திரு.வேலு, தற்போது மாப்பிள்ளை சம்பா ரகத்தைப் பயிரிட்டுள்ளார். தற்போது நேரடி விதைப்பு விட்டுள்ளதாகக் கூறுகிறார். தூய மல்லி ரக நெல் உள்ளிட்ட பல்வேறு ரகங்களைப் பயிரிட்டு வருவதாகவும் கூறுகிறார். தற்போது அரை ஏக்கர் பரப்பளவில் 52 என்ற புதிய நெல் ரகத்தைப் பயிரிட்டுள்ளதாகக் கூறுகிறார். கடலை, எள், உளுந்து, துவரை, பாசிப்பருப்பு உள்ளிட்ட பயிர்களையும் தமது வயலில் பயிரிட்டு வருவதாகக் கூறுகிறார் திரு.வேலு. தமது சொந்த உபயோகத்துக்குப் போக, மீதமுள்ளவற்றை சந்தைகளில் போய் விற்பனை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
மானியம் மூலம் இடுபொருள்கள் பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார். ரசாயன உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் கிடைத்தது. இருந்தாலும், அது மண்ணுக்கும் மனிதனுக்கும் நல்லதல்ல. குறைந்த மகசூல் கிடைத்தாலும், ஆத்மதிருப்தியோடு அதை செய்து வருகிறேன் என்கிறார் திரு.வேலு.
மேலும், 10 மாடுகளை நிர்வகித்து வருவதாகக் கூறும் அவர், அதில் கிடைக்கும் பாலை அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறுகிறார்.
மேலும், பஞ்சகாவ்யம், மீன் அமிலம் ஆகியவற்றைத் தயாரித்து, வயல்களில் பயன்படுத்தி வருகிறேன். அருகில் இருப்போருக்கும் அளிக்கிறேன். அதுபோல, எலுமிச்சை சாறை வயல்களில் பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகள் வராமல் தடுக்கலாம் என்கிறார்.
இயற்கை விவசாய முறையில் பயிரிடும் நெல், காய்கறிகளுக்கு வரவேற்பு உள்ளது. இது இன்னும் அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திரு.ம.வேலு.
தொடர்புக்கு – திரு.ம.வேலு.
94422 04101.

More Stories
பெண் விவசாயிகள் நிறைந்த தோப்புப்பட்டி
பலே…பலே ….இவ்வளவு நன்மைகளா ???பச்சைத்தங்கமாம் மூங்கிலால்……
வேளாண் பண்ணை மேம்பாட்டில் முனைப்புக் காட்டும் முன்னாள் ராணுவ அதிகாரி