முனைவர் மொ.ச.கண்ணதாசன்’, திரு. பொ. மகேஸ்வரன்’ மற்றும் முனைவர் ந. விமல் ராஜ்குமார்’
‘மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர், தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) இ.வே.ஆ.க. – வேளாண் அறிவியல் நிலையம், காளசமுத்திரம் – கள்ளக்குறிச்சி
மாவட்டம்.
’பேராசிரியர், விரிவாக்க கல்வி இயக்குநரகம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை- 600051
கறவைமாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்கள்
கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை தங்கள் வயலிலே உற்பத்தி செய்வதோடு, கால்நடைகளின் கழிவுகளையும் உரமாக மாற்றுவதால், சுற்றுச்சூழல் மேம்படுவதோடு பொருளாதார
பலனும் அடையலாம்.
கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் அசோலா, புரதச்சத்து மிகுந்த, பெரணி வகையைச் சேர்ந்த நீரில் மிதக்கும் தாவரமாகும். அசோலாவை ஈரமாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். நிகழ்வில் உள்ள எல்-நினோ காலத்தில்
கால்நடைகளை வளர்க்கத் தேவையான பசுந்தீவன பற்றாக்குறையை எதிர்கொள்ள, அசோலாவை வளர்க்க இது சரியான தருணம்.
*அசோலாவில் காணப்படும்* ஊட்டச்சத்துக்கள்
அசோலாவில் இயல்பாகவே, புரதச்சத்து 25-35 சதவீதமும், நார்ச்சத்து 14-15 சதவீதமும், கொழுப்புச்சத்து 3 சதவீதமும், மாவுச்சத்து 45-50 சதவீதமும், தாது உப்புகள் 10-12 சதவீதமும் இருக்கும். மேலும் அசோலாவில் கால்நடைகளுக்கு தேவையான முக்கிய அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் இருக்கும்.
*அசோலாவை வளர்க்கும் வழிமுறைகள்*
• மர நிழலில், நேரடி சூரிய வெளிச்சம் நாளொன்றிற்கு மூன்று மணி நேரம் மிகாமல் இருக்கும் தூய்மையான இடத்தில், அசோலாவை நிர நிரப்பிய தொட்டி அல்லது குழியில் வளர்க்கலாம்.
• அசோலாவை வளர்க்க ஏற்படுத்தும் குழி 6 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் 1 அடி ஆழம் உள்ளவாறு இருக்க வேண்டும். குழியில் புல், பூண்டுகள் வளர்வதை தடுக்க யூரியா பைகளை பரப்பி, அதன் மீது சில்பாலின் பாய் முழுவதுமாக, குழிக்கு வெளியே நான்கு புறமும் ஒரு அடி நீளம் நீண்டிருக்குமாறு, பரப்ப வேண்டும்.
சூரிய வெளிச்சம் அதிகம் இருந்தால், குழியின் மீது பந்தல் அமைத்து, அதன் மேற்புறம் பச்சை நிற விவசாய வலையை கட்ட வேண்டும்.
• குழியில் உள்ள சில்பாலின் பாயின் மீது வளமான நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட 30 கிலோ செம்மண் அல்லது சலித்த மண்ணை பரப்ப வேண்டும்.
* பின்னர் மாட்டு சாணத்தை 5 கிலோ வரை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இத்துடன் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் அல்லது இரண்டு கைப்பிடி அளவு போர் மண் (எம் சாண்ட்) கலக்க வேண்டும்.
* பின்னர் குழியில் சுத்தமான தண்ணீரை 10-12 சென்டிமீட்டர் உயரம் வரும் வரை ஊற்ற வேண்டும்.
* இறுதியாக 1 கிலோ சுத்தமான அசோலா விதைகளை குழியில் தூவ வேண்டும், நன்றாக வளர்ச்சி அடைந்த அசோலாவை விதையாகவும், தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
மேற்கண்ட செய்முறையை செய்த மூன்று நாட்களில் அசோலாவின் அளவு மூன்று மடங்காக உயரும். 2 முதல் 3 வார காலத்தில், குழி முழுவதும் அசோலா நல்ல வளர்ச்சி அடைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும். இதிலிருந்து நாளொன்றிற்கு சுமார் ஒரு கிலோ வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
*அசோலா குழியை பராமரிக்கும் வழிமுறைகள்*
தினந்தோறும் குழியில் உள்ள அசோலாவை நன்றாக, கைகளைக் கொண்டு கலக்கி விட வேண்டும்.
வாரம் ஒரு முறை ஒரு கிலோ புதிய சாணத்தை கலந்து குழியில் ஊற்ற வேண்டும்.
ஒவ்வொரு பத்து நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்றி சுத்தமான தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டும். வானத்திலிருந்து நேரடியாக சேகரிக்கப்படும் மழை நீரை பயன்படுத்தினால் அசோலா மிகவும் நன்றாக வளரும்.
ஒவ்வொரு மாதமும் மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியில் எடுத்து புதிதாக சலித்த மண்ணை கொண்டு நிரப்ப வேண்டும்.
6 மாதங்களுக்கு ஒரு முறை குழியின் அடியில் உள்ள கலவையை முழுமையாக மாற்றி, புதிய அசோலா குழியை அமைக்க வேண்டும். அகற்றிய கழிவை, உரமாகப் பயன்படுத்தலாம்.
* அசோலாவில் பூச்சி, புழு மற்றும் நோய் தாக்கம் குறித்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக முற்றிலுமாக புதிய அசோலா குழியை ஏற்படுத்த வேண்டும்.
குழிக்கு பதிலாக, அதே அளவில் தொட்டியை கட்டி, அதிலும் அசோலாவை வளர்க்கலாம். வர்த்தக ரீதியில் அசோலாவை வளர்க்கும் பைகளும் கிடைக்கின்றன.
*அசோலா வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்*
தண்ணீர தேவையான அளவு இல்லாத போது அல்லது குழியை நிரப்ப உப்பு சுவையுடைய நீரையோ, விரும்பத்தகாத வாசனை கொண்ட நீரையோ பயன்படுத்தும் போது அசோலா வளர்ச்சி பாதிப்படையும்.
* அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் போது அசோலா பழுப்பு நிறமாக மாறும்.
* அதிக காற்று அடிக்கும் போது அசோலா வளர்ச்சி பாதிப்படையும்,
• காற்றின் ஈரப்பதம் 85-90 சதவீதம் இருக்க வேண்டும். இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்பொழுது வளர்ச்சி பாதிக்கப்படும்.
• காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலா வளர்ச்சி பாதிக்கப்படும்.
*கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் வழிமுறைகள்*
• கறவை மாட்டிற்கு தினந்தோறும் 1.5-2 கிலோ வரையிலும், ஒரு ஆட்டிற்கு 250-500 கிராம்
வரையிலும், ஒரு பன்றிக்கு 1.5-2 கிலோ வரையிலும், ஒரு முயலுக்கு 100 கிராம் வரையிலும், ஒரு கோழிக்கு 20-30 கிராம் வரையிலும் அசோலாவை தீவனமாக கொடுக்கலாம்.
• அசோலா வளர்க்கும் குழியில் சாணம் சேர்ப்பதால், ஏற்படும் வாசனையைப் போக்க அசோலாவை நன்றாக கழுவி, பின்னர் நீரைப் பிழிந்து, கலப்பு தீவனம் அல்லது வைக்கோலுடன் சேர்த்து, கறவை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் தீவனமாக அளித்து, பழக்க வேண்டும். ஆரம்பத்தில் அடர் தீவனத்துடன் அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, தீவனமாக கொடுத்து, கால்நடைகளை பழக்கலாம்.
*அசோலாவை தீவனமாக கொடுப்பதால் ஏற்படும் பயன்கள்*
• கோடை காலம் மற்றும் தீவன தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அசோலா ஒரு நல்ல புரதச்சத்து மிக்க பசுந்தீவனம்.
• அசோலாவை தீவனமாக அளிப்பதால் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பு அல்லாத சத்துக்கள் மற்றும் மொத்த பால் உற்பத்தி அதிகரிக்கின்றது
• தீவனத்துடன் உப்பு மற்றும் அசோலாவை சேர்த்து பன்றிகளுக்கு அளிப்பதால், பன்றியின் எடை கூடுவது மட்டுமின்றி அதன் இறைச்சி தன்மையும் மேம்படும்.
• புரதச்சத்து அதிகம் இருப்பதால் கோழிகள் நன்றாக வளர்ச்சி அடைவதோடு, கோழி முட்டையின் தரம் மேம்படும். இதனால், தரமான கோழிக்குஞ்சுகளை பெறலாம்.
• அசோலா உற்பத்திக்கான செலவு கிலோ ஒன்றிற்கு சுமார் ரூபாய் 1 – 2 வரை மட்டுமே. இதனால், விவசாயிகள் ஒரு கிலோ அசோலாவை தீவனமாக பயன்படுத்தும் பொழுது, ரூபாய் 30 முதல் ரூபாய் 45 வரை தீவன செலவை குறைக்க முடியும்.
*நெல் கழனியில் அசோலாவின் பயன்பாடு*
• நெல் நடவு செய்த கழனிகளில் அசோலாவை தூவுவதன் மூலம், அசோலா பசுமை உரமாக செயல்பட்டு, நெல் மகசூலையும் அதிகரிக்கும்.
நிகழ்வில் உள்ள எல்-நினோ காலத்தை எதிர்கொள்ளவும், ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் கோடை காலத்தில் ஏற்படும் பசுந்தீவன பற்றாக்குறையை சமாளிக்கவும், அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவன ஆதாரமாக செயல்படும். ஆகையால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அசோலாவை வளர்த்து, ஆதாயம் பெருக்கிக் கொள்ள முடியும்.

More Stories
கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை