October 24, 2026

நெல்லில் களர், உவர் தன்மை மேலாண்மை முறைகள்

உலகில் உள்ள பெரும்பான்மையான (2.7 மில்லியன்) மக்களின் நிலையான உணவுப்பயிராக நெல் இருக்கின்றது. நெல்லின் அதிக மகசூலுக்கு அந்த மண்ணின் வளமான தன்மையும் மண்ணின் களர், உவர் காரணிகளும் முக்கிய பங்கு
வகிக்கின்றன.

இந்த களர், உவர் காரணிகளானது,
நடுநிலை தன்மையுடன் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த மகசூலை அடையமுடியும். மண்ணில் அமிலத்தன்மை (அ) காரத்தன்மை அதிகளவில் இருந்தால் அது மகசூலை பாதிக்கும்.

களர் தன்மை கொண்ட மண்ணின் குணநலன்கள்

இந்த வகையான நிலங்களில் மழைக்காலங்களில் மண்ணானது களிமண் தன்மை கொண்டதாகவும் வறண்ட காலங்களில் மண்ணில் வெடிப்பு ஏற்பட்டும் காணப்படும்.

இந்த வகை மண்ணில் வடிகால் வசதி குறைவாகவே காணப்படும். நெற்பயிரை பொறுத்த அளவில் களர் தன்மையால் அதன் வேர்களானது இறந்து போக நேரிடுகின்றது. நெற்பயிரில் தூர் கட்டும் திறனும் குறைவாகவே இருக்கும். மேலும் இவ்வகை நிலங்களில் தழை, தாமிரம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும் அதிக அளவில் இருக்கும்.

நெற்பயிரின் பதர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். நெற்கதிரில் மணிகள் பிடிக்கும் திறன் குறைவாகவே இருக்கும்.

உவர் தன்மையுள்ள மண்ணின் குணநலன்கள்

நீரில் கரையக்கூடிய உப்புக்களின் அளவு இந்நிலங்களில் அதிகளவு காணப்படும். இதனால் செடிகளில் நீர் எடுத்துக்கொள்ளும் அளவு பாதிக்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் வேர்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இதனால் அந்த செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் அளவு குறைவாகவே காணப்படும். இதனால் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மகசூலும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றது.

களர் உவர் தன்மை மேலாண்மை
முறைகள்

இதற்கு முதலாவதாக விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் உள்ள மண்ணை பரிசோதனைக் கூடங்களுக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்ய வேண்டும். அந்த முடிவுகளின் படி விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சல்பேட் உரங்களை இடலாம்.

வடிகால் வசதி இல்லாததே களர் உவர் தன்மைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இதற்குரிய மேலாண்மை முறைகள் பின்வருமாறு.

1.கோடை உழவு

2.உழவிற்கு பின்பு நிலத்தை 20லிருந்து 30 சென்ட்டாக பிரிக்கவும்.

3.பார்கள் அமைக்கவும்.

4.பரிந்துரைக்கப்பட்ட அளவு ஜிப்சம் இடவும்.

5.இந்த நிலங்களில் இரண்டு நாட்களுக்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

6.இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த தண்ணீரை வடித்து விடவும்.

7.இந்த முறையில் மீண்டும் தண்ணீரை தேக்கி வடித்து விடவும். இதன் மூலம் தேவையில்லாத உப்புகள் நீரில் கரைத்து வடிக்கப்படுகின்றது.

8.இதன் பிறகு பசுந்தாள் உரங்களான சணப்பை, தக்கைப்பூண்டு ஆகியவற்றை விதைத்து அவை பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவேண்டும்.

9.இவற்றைத் தவிர களர் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகங்களான கோ-43 மற்றும் திருச்சி 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து நடலாம்.

உழவியல் முறையில் களர் உவர் தன்மை மேலாண்மை

1.களர் நிலங்களை மேலோட்டமாக உழவு செய்ய வேண்டும்.

2.உவர் நிலங்களை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

3.35-40 நாட்கள் முதிர்ந்த நெல் நாற்றுகளை தேர்வு செய்து நடவேண்டும்.

4.நெல் நாற்றுக்களை அடர்த்தியாக நடவு செய்ய வேண்டும்.

5.ஒரு குத்திற்கு 5 நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

6.நடவு செய்வதற்கு முன்பாக ஜிங்க் சல்பேட் பரிந்துரை செய்யப்பட்ட அளவு (15- 20 கிலோ) இட்டு நடவு செய்ய வேண்டும்.

7.பரிந்துரைக்கபட்ட தழைச்சத்தை விட 20 சதம் கூடுதலாக தழைச்சத்தை இடவேண்டும்.

8.பாதிக்கப்பட்ட மண்ணில் பசுந்தாள் உரங்களை வளர்த்து மடக்கி உழ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு மண்ணில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் நெற்பயிருக்கு கிடைக்கும் நுண்ணூட்டச்சத்துக்களின் அளவும் அதிகரிக்கின்றது.

களர், உவர் நிலங்களின் மேலாண்மை முறைகள்

களர், உவர் நிலங்களில் நெல்லில் மகசூலை அதிகரித்தல்

நல்ல வடிகால் வசதி

ஜிபசம், சிங்க் சல்பேட், பசுந்தாள்
உரங்கள்

திருச்சி (1,2,3,4,5) ரகங்களை பயன்படுத்துதல்

4 முதல் 5 நாற்றுக்கள் ஒரு குத்திற்கு

35-40 வயதான நெல் நாற்றுக்களை நடுதல்

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா

20 சதம் அதிக தழைச்சத்து

ஒரு சதுரமீட்டருக்கு 66 குத்துக்கள்

தகவல்: முனைவர் செ. தமிழ் செல்வி (பயிர் வினையியல் துறை, முனைவர் செ.சுதாஷா, (தாவர நோயியல் துறை), முனைவர். சி.பானுமதி, பேராசிரியர் மற்றும் துறை தலைவர், முனைவர்.

ப.யோக மீனாட்சி, (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்), முனைவர் வி.அ விஜயசாந்தி (பூச்சியியல் துறை), முனைவர்.
க. சிவகாமி, முனைவர் சு. ம. சுரேஷ்குமார், முனைவர். ஆ. ப. சீனிவாசப்பெருமாள், (உழவியல் துறை), முனைவர். கோ.குமரேசன் (வேளாண் நுண்ணுயிரியியல் துறை), முனைவர் அ. புனிதா (தோட்டக்கலைத்துறை) மற்றும் முனைவர். இரா. அகிலா, (வேளாண் விரிவாக்கத்துறை), நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம் – 602025