June 7, 2026

மண்ணின் தரமும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலும் தமிழ்நாட்டில் செம்மண் (62 சதவிகிதம்), வண்டல் மண் (16 சதவிகிதம்), கரிசல் மண் (12 சதவிகிதம்), சரளை மண் (3 சதவிகிதம்) மற்றும் மணற்சாரி மண் (7 சதவிகிதம்) என 5 முக்கிய மண் வகைகள் உள்ளன.

மண்ணின் பண்புகளை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் என மூன்று வகைப்படுத்தலாம். அந்த மூவகைப் பண்புகளும் துகள் அளவு, மண் நயம், மண் அமைப்பு, மண் அடர்த்தி, துகள் இடைவெளி, மண்ணின் நிறம், மண்ணின் வெப்பம், நிலக் காற்று, நில நீர், நீர்ப்பிடிப்புத் திறன், நிலமடக்கு மற்றும் மண்ணில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. அதுமட்டுமின்றி, மண் வளம், மண் நலம் மற்றும் பயிர் உற்பத்தித் திறன் ஆகிய இந்த மூன்று வகைப் பண்புகளே முடிவு செய்கின்றன.

தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மண் வாழ்வாதாரமாக உள்ளது. பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் மற்றும் அங்ககப் பொருள்களை உள்ளடக்கிய பல்லடுக்கு அமைப்பாக மண் திகழ்கிறது. மண் நலத்தினை அந்த மண்ணில் வளரும் பயிரினைப் பாதிக்கும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களின் அளவினை வைத்தும் அளவிட முடியும்.

மண்ணின் தரத்தைப் பொறுத்தும் பூச்சிகள், நோய்கள் (நுண்ணுயிர்கள், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைகள்) மற்றும் நூற்புழுக்களால் ஏற்படக்கூடிய பயிர்ப் பாதிப்புகள் குறித்து புரிந்துகொள்ள இக் கட்டுரை உதவும்.

உலர் வேர் அழுகல் நோய் (RHIZOCTONIA BATATICOLA = MACROPHOMINA PHASEOLINA)

வறண்ட மண்ணில் உலர் வேர் அழுகல் பூசணமானது நீண்ட நாள் தங்கியிருக்க இயலும். இப் பூசணத்தின் வித்துக்கள் 60 டிகிரி வரை கூட தாங்க வல்லவை. அதிக மண் வெப்பம் மற்றும் கடும் வறட்சியான மண் சூழல் இந் நோய்ப் பரவுதலுக்குச் சாதகமானது. எனவேதான், தென் மாவட்டங்களில் களிமண் துகள் அதிகம் இல்லாத மணற்பாங்கான கரிசல் மண்ணில் பயிரிடப்பட்ட கோடை இறவைப் பருத்தி மற்றும் மானாவாரி பயறு வகைப் பயிர்கள் தொடர்ந்து உலர் அழுகல் நோயால் பாதிக்கப்படுகின்றன.

அறிகுறிகள் – முளைவிடும் நாற்றுகளின் கீழ்ப்பகுதித் தண்டில் கரும் புண்கள் உருவாகி, தண்டின் பட்டைப்பகுதி பிரிந்து விலகி நாற்றுகள் மடியும். தண்டின் அடிப்பகுதியில் பட்டை நார்நாராகி விடும். வேர்ப்பகுதி சிதைவடையும். பிடுங்கினால் செடிகள் எளிதில் வந்துவிடும்.

கட்டுப்படுத்த…
ஏக்கருக்கு 5 டன்கள் கடைசி உழவில் நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

சூடோமோனாஸ் (ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் (TJP K) அல்லது கார்பென்டாசிம் (ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் (TJP K) மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

வேரழுகல் நோயினால் வளர்ந்த பயிர் பாதிக்கப்பட்டிருந்தால், செடிகளின் தூரில் கார்பென்டாசிம் 0.2 சதக் கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் அளவில்) கரைத்து ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும்.

2. காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் நோய் (DAMPING OFF, PYTHIUM SPP.)
களித் துகள்கள் (CLAY PARTICLES) மிகுந்திருக்கும். மண்ணில் நன்கு நீர் வடிந்து போக முடியாது. எனவே, தாழ்வான பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் நிலவும். மழைக் காலத்தில் அப்படிப்பட்ட மண்ணுள்ள நாற்றங்காலில் வளர்ந்துள்ள மிளகாய், கத்தரி, தக்காளி போன்ற காய்கறிப் பயிர்களின் நாற்றுகளில் நாற்றழுகல் நோய் ஏற்பட்டு வேர்கள் அழுகி விடும். நாற்றழுகல் நோயைத் தவிர்க்க, நாற்றங்காலை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதியில் மேட்டுப்பாத்தியாக அமைத்தல் வேண்டும். மேலும், தேவைக்கு ஏற்ப மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும்.

3. ப்யூசேரியம் வாடல் நோய் (FUSARIUM SPP.)
இந்த வாடல் நோய் பருத்தி, வாழை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் காய்கறிப் பயிர்களில் வரக்கூடியதாகும்.

ப்யூசேரியம் வாடல் நோய் தாக்குதலானது வெப்பமான சூழ்நிலை மற்றும் மித வெப்பமான ஈர மண்ணில் வளர்ந்துள்ள பயிரில் விரைந்து பரவுகிறது.

பருத்தி மற்றும் காய்கறிப் பயிர்களில் வளர்ந்த செடிகளை இந் நோய் தாக்கினால் அடிப்பகுதியிலுள்ள முதிர்ந்த இலைகள் முதலில் மஞ்சளாக மாறிய பின்னர் வாடி உதிர்ந்து விடுகின்றன. தண்டின் அடிப்பகுதி கருப்பு நிறத்தில் காணப்படும். உரித்துப் பார்த்தால் கருப்பு அல்லது பழுப்பு நிறக் கோடுகள் தென்படும்.

உலர் வேரழுகல் நோய்க்கு பரிந்துரைக்கப்பட்ட முறைகளையே கடைப்பிடித்து இந் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

4. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய்
மணற்பாங்கான உவர் அல்லது தென்னை மரங்களில் தஞ்சாவூர் வாடல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, பரிந்துரைக்கப்பட்டபடி, பசுந்தழை அல்லது தொழு உரங்களுடன் தழை மணி மற்றும் சாம்பல் சத்துகள் இட்டு நன்கு பராமரிக்கப்படாத தோப்புகளே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

இதன் முதல் அறிகுறியாக, தண்டுப் பகுதியின் அடிப்பாகத்தில் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். வாடல் நோய் தாக்கப்பட்ட மரத்தின் அடி மட்டைகள் பழுப்பு நிறமடைந்து, காய்ந்து தண்டினைச் சுற்றிலும் தொங்கும். பிறகு, தென்னை ஓலைகள் உதிர்ந்து மொட்டையாகக் காணப்படும்.

மரம் ஒன்றுக்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து இட வேண்டும். மேற்கண்டவற்றுடன் ஒன்னேகால் கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் இரண்டரை கிலோ பொட்டாஷ் ஆகியவற்றையும் இட வேண்டும். மரத்தின் தூரிலிருந்து ஐந்து அடி தள்ளி ஓர் அடி அகலம், முக்கால் அடி ஆழத்தில் வட்டமாகக் குழி எடுத்து, மேற்குறிப்பிட்ட உரங்களை மழைக் காலத்தில் இட்டு மண் மூடி நன்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

தென்னை அருகே வாழையை ஊடுபயிர் செய்தால் இந் நோய் குறையும்.

ஒரு கிலோ டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்ற பூசணத்தை 50 கிலோ மக்கிய எருவுடன் கலந்து மரத்தைச் சுற்றி 3 அடி உயரத்தில் இட்டு, இந் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நோய் தாக்கிய ஒவ்வொரு மரத்துக்கும் 40 லிட்டர் TJP K ஒரு சத போர்டோக் கலவையை (கீழ்க்கண்டவாறு தயாரித்து) மரத்தைச் சுற்றி ஆறு அடி விட்டமுள்ள வட்டப் பாத்தியில் மண் நன்றாக நனையுமாறு ஊற்றி இந் நோய் பூசணத்தை அழிக்கலாம்.

நூறு லிட்டர் ஒரு சத போர்டோ கலவை தயாரிக்க, பொடித்த ஒரு கிலோ தாமிர சல்பேட் (மயில்துத்தம்), ஒரு கிலோ சுட்ட சுண்ணாம்புப் பொடி மற்றும் 100 லிட்டர் நீர் தேவை.

பிளாஸ்டிக் கலன்களில் தனித்தனியாக தாமிர சல்பேட்டையும், சுட்ட சுண்ணாம்பையும் தலா 50 லிட்டரில் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், கவனமாக தாமிர சல்பேட் கரைசலைத்தான் சுண்ணாம்புக் கரைசலில் மெதுவாக ஊற்றிக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பளபளப்பான இரும்பு பிளேடினை கரைசலில் முக்கிப் பார்க்கவும். பிளேடில் சிவப்பு நிறப் படிவம் ஏற்பட்டால் சுண்ணாம்புக் கரைசல் மேற்கொண்டு தேவை என்று புரிந்து கொள்ள வேண்டும். சுண்ணாம்புக் கரைசலை மேற்கொண்டு தயாரித்து தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு மூன்று முறை (ஏப்ரல்- மே, செப்டம்பர்-அக்டோபர் மற்றும் ஜனவரி,பிப்ரவரி மாதங்களில்) இரண்டு மில்லி டிரைடிமார்ப் (காலிக்ஸின்-வணிகப் பெயர்) அல்லது ஒரு மில்லி ஹெக்சோகோனசோல் மருந்தை நூறு மில்லி நீரில் கலந்து வேர் மூலம் செலுத்தி, வேரழுகல் நோய் பரவுதலைத் தடுக்கலாம்.

5. நெற்பயிரில் கைரா நோய் (துத்தநாகப் பற்றாக்குறை)
குறைந்த அளவில் அங்ககச் சத்தும் அதிகப்படியாக மணிச்சத்தும் இடப்பட்ட மண்ணில் வளரும் நெல் பயிரானது காலை வெப்ப நிலை 25 டிகிரிக்கு கீழே குறையும்போது கைரா நோய்க்கு உள்ளாகிறது. குறிப்பாக, களர், உவர் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள மண்ணிலும் வடிகால் வசதியற்ற வயலிலும் கைரா நோய் அதிகம் ஏற்படுகிறது. பயிர் வளர்ச்சி ஆங்காங்கே குன்றும். ஓரிரு இலைகளில் துருப்பிடித்தது போன்ற பகுதிகள் காணப்படும். வயலினுள் பள்ளமான பகுதியில் உள்ள பயிரில் இந்த அறிகுறிகள் முதலில் தோன்றும். நெல் பயிரில் கைரா நோயைக் கட்டுப்படுத்த,

சம்பா அல்லது பிசானம் அல்லது கும்பப்பூ என அழைக்கப்படும் ராபி பருவ நெல்லுக்குத் தேவையான அளவு (ஏக்கருக்கு 5 டன்) இயற்கை உரமிட வேண்டும்.

வயலை மேடுபள்ளமின்றி சமப்படுத்தி, சேறு கலக்க வேண்டும்.

சூப்பர் பாஸ்பேட் மற்றும் டிஏபி உரங்களைச் சரியான அளவுக்கு மிகாமல் இட வேண்டும். அறிகுறிகள் ஏற்பட்டால், துத்தநாக சல்பேட் 0.5 சத கரைசலை (ஏக்கருக்கு 200 லிட்டருக்கு ஒரு கிலோ துத்தநாக சல்பேட் TJP K கரைத்து) கைத்தெளிப்பான் கொண்டு 10 நாள்கள் இடைவெளியில் இருமுறை பயிர் முழுவதும் நன்கு நனையும்படியாகத் தெளிக்க வேண்டும்.

குறிப்பு – துத்தநாக சல்பேட் கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், இன்ட்ரான்-வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி TJP K சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். (வேறு சாதாரண வகையான சோப்புகளையோ (காதி கதா சோப் உள்பட) ஷாம்புகளையோ சேர்க்கக் கூடாது.

6. மக்காச்சோளத்தில் மணிச்சத்துப் பற்றாக்குறை
அதிக மழைக் காலத்தில், களிமண் பாங்கான கரிசல் மண் பகுதிகளில் பாத்திகளில் தண்ணீர் தேங்கி ஈரப்பதம் மிகுதியாகும். சூழ்நிலையில், மணிச்சத்தானது, மக்காச்சோளத்துக்குக் கிடைக்காத நிலையில், இலைகளின் பசுமை நிறம் மாறி இளஞ்சிவப்பு நிறமாகிறது.

குறைந்த அளவு ஈரப்பதமான (அதாவது வடிகால் வசதியுடைய) இருமண்பாடான (LOAMY SOILS) நிலங்களில்தான் மணிச்சத்தானது எளிதாக மக்காச்சோளப் பயிருக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது. மக்காச் சோளத்தைப் பாத்திகளில் பயிரிடாமல், பார்களில் பயிரிட்டால் வயலிலிருந்து மழை நீர் எளிதில் வெளியேற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பாரில் உள்ள பயிரின் வேர்களுக்கு ஓரளவு காற்றோட்டமும் கிடைக்கும்.

7. கரும்பு இளங்குருத்துப் புழு
ஈரப்பதம் காக்க முடியாத மணற்பாங்கான மண்ணில் பயிரிடப்பட்ட கரும்புப் பயிரானது (குறிப்பாக, மூன்று மாதத்துக்குட்பட்ட இளம் பயிராக இருப்பின்) வெப்பமான மாதங்களில் இளங்குருத்துப் புழுத் தாக்குதலினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

இளங்குருத்துப் புழுவினைக் கட்டுப்படுத்த…

கரும்பு நடவு செய்த மூன்று நாட்கள் கழித்து 10-15 செ.மீ. (அரையடி) உயரத்துக்கு காய்ந்த கரும்புச் சோகையினைப் பரப்பி நிலப் போர்வை அமைப்பதன் மூலமாக மண்ஈரப்பதத்தைக் காக்க இயலும். போதுமான அளவு நீர் பாய்ச்சினால் மண் ஈரப்பதம் அதிகரிப்பதோடு, மண் வெப்பமும் குறைவதால், இளங்குருத்துப் புழுவின் பெருக்கத்தைக் குறைக்க இயலும்.

8. ஆர்க்கிட் மொக்கு ஈ (ORCHID BLOSSOM MIDGE)

ஆர்க்கிட் செடிகளை பச்சை வலை நிழலில், தாங்கிகளில் (STANDS) வைத்து வளர்க்கும்போது மொக்கு ஈ தாக்குதலால் பூ மொட்டு காய்ந்துவிடும். அதன் முதிர்ந்த புழுக்கள் பூ மொட்டிலிருந்து வெளியேறி சற்றே ஈரப்பதமான மண்ணில் விழுந்து கூட்டுப் புழுவாகின்றன. சில நாள்களில் கூட்டுப் புழுவிலிருந்து மொக்கு ஈ வெளிவந்து மீண்டும் ஆர்க்கிட் பூ மொட்டுகளில் முட்டையிட்டு, மொட்டு சேதம் தொடர்கதையாகிறது.

முதிர்ந்த புழுக்கள் கூட்டுப்புழு பருவம் அடைவதற்காக மண்ணில் துள்ளி விழும். ஆர்க்கிட் செடிகள் வளரும் தாங்கிகளின் கீழுள்ள மண்ணின் ஈரத்தினைச் சேறு பதமாக மாற்றி வைத்தால், கூட்டுப் புழுவாக ஆவதற்கு விழும் புழுக்கள் சேற்றுப்பதமான மண்ணில் மூச்சு விட முடியாமல் இறந்து விடுகின்றன. (ஆனால், இதே பூச்சியின் சேதம் மல்லிகையில் ஏற்படும்போது மல்லிகைச் செடியின் கீழுள்ள மண்ணின் ஈரத்தினைச் சேறு பதமாக மாற்றி வைத்தால் வேரழுகல் நோய்க்கு வழிவகை செய்துவிடும்).

9. கரும்பில் வெள்ளை ஈ
உவர் மண்ணில் பயிரிடப்பட்ட கரும்புப் பயிரில் வறட்சியான சூழ்நிலையில், வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சோகைகள் இளஞ் சிவப்பு அல்லது கரு ஊதா நிறமாக (நாவல் பழ நிறம்) மாறி, பின்னர் உலர்ந்து காய்ந்து விடுகின்றன. பயிரின் வளர்ச்சியும் குன்றும்.

மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் உவர்தன்மை அறிந்து, பசுந்தாள் உரங்கள். குறிப்பாக, தக்கைப்பூண்டு பயிரிட்டு, அது பூக்கும் தருணத்தில் மக்கி, உழுது மண்ணில் சேர்ப்பதன் மூலம் மண்ணின் உவர்தன்மையைக் குறைக்க இயலும்.

10. கரையான் அங்ககச் சத்து (கரிமச் சத்து)
குறைந்த மண்ணில். குறிப்பாக, இருமண்பங்கான செம்பொறை மண்ணில், மண் வறட்சியடையும் போது கரையான் சேதமானது அதிகப்படும்.

தென்னை, கரும்புப் பயிர், தேக்கு மற்றும் முந்திரி மரங்கள் மற்றும் மானாவாரி நெற்பயிர்கள் கடுங்கோடையில் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மரத்தண்டில் கரையான் ஏறினாலே வேர்களை கரையான் தின்று கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். நன்கு நீர்ப் பாசனம் செய்தால் கரையான் தாக்குதல் குறையும்.

நிலப்போர்வை (MULCHING) அமைத்தால் மண் ஈரம் பாதுகாக்கப்படுவதால் கரையான் சேதமும் குறையும்.

மண்ணில் நீர்ப்பிடிப்பு ஏற்பட போதுமான அளவு இலை மட்கு அல்லது நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

நட்ட இளம் கரும்புப் பயிரில் ஏற்பட்ட கரையான் தாக்குதலைக் குறைக்க பாதிப்பு உள்ள பாத்திகளில் குளோர்பைரிபாஸ் 0.05 சதக் கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு இரண்டரை மில்லி வீதம்) ஊற்றி கட்டுப்படுத்தலாம்.

11. வேர்ப்புழு
வேர்ப்புழுவின் சேதமானது அங்ககச் சத்து (கரிமச்சத்து) குறைந்த மண்ணில் குறிப்பாக இருமண்பாங்கான செம்பொறை மண்ணில் வறட்சிக் காலத்தில் நிலக்கடலை, கரும்பு மற்றும் பயிர்கள் அதிகமாகச் சேதப்படுத்தப்படுகின்றன. மணற்பாங்கான செம்மண் மற்றும் ஆற்று வண்டல் மண் பகுதிகளிலும் சேதம் அதிகமாகும். வயலில் நீர் தேங்க வைத்து (முடியும் பகுதிகளில்) இப் புழுக்களை மண்ணுக்குள் இருந்து வெளிக்கொணர் இயலும். குளோரிபைரிபாஸ் விதை நேர்த்தி செய்வதன் மூலம் நிலக்கடலைப் பயிரில் வேர்ப்புழுவினால் ஏற்படும் தாக்குதலைத் தவிர்க்கலாம். பயிரில் ஏற்பட்ட தாக்குதலைக் குறைக்க, பாதிப்பு உள்ள பாத்திகளில் குளோரிபைரிபாஸ் 0.05 சதக் கரைசலை (ஒரு லிட்டர் நீருக்கு இரண்டரை மில்லி வீதம்) ஊற்றிக் கட்டுப்படுத்தலாம்.

12. நூற்புழுக்கள்
வாழை (குடையும் நூற்புழு), காய்கறிப் பயிர்கள் (வேர் முடிச்சு நூற்புழு மற்றும் வேரழுகல் நூற்புழு) என பல்வேறு பயிர்களின் நூற்புழுக்களின் சேதம் பரவலாகக் காணப்படுகிறது.

கடினமான களிமண்களைக் காட்டிலும், மணற்பாங்கான லேசான மண்வகையில்தான் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களின் எண்ணிக்கையும் சேதமும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலமட்கு குறைவாக (இயற்கை உரங்கள் இடாததால்) இருந்தால், பயிரைத் தாக்கும்.

நுற்புழுக்களை (ரேடோபோலஸ் (RADOPHOLUS SPP.), பிராட்டிலென்க்ஸ் (PATYLENCHUS SPP.), மெலாய்டோகைனி (MELOTDOGYNE SPP.), ஹிட்டிரோடீரா (HETERODERA SPP.)) ஆகியவற்றினை அழிக்கக்கூடிய இரை விழுங்கி நூற்புழுக்கள் (PREDATORY NEMATODES) மற்றும் எதிரி நுண்ணுயிரிகளின் (ANTAGONISTIC MICROBES) எண்ணிக்கை குறைந்து விடுகின்றன. இதனால் பயிரைத் தாக்கும் நூற்புழுக்களால் எளிதாக மண்ணுக்குள் நகர்ந்து வேர்களைப் பாதிக்க இயலுகிறது.

அங்ககப் பொருள்களான கரும்பாலைக் கழிவு, தேயிலைக் கழிவு, ஜவ்வரிசி ஆலைக்கழிவு, பசுந்தாள் உரங்கள் (சணப்பை, கொழிஞ்சி, எருக்கு, தக்கைப்பூண்டு, வேப்பம் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு போன்றவற்றை தேவைக்கேற்ப இடும்போது கீழ்க்கண்ட வகைகளில் நூற்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

சில அங்ககப் பொருள்கள் தாமாகவே நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகின்றன (எடுத்துக்காட்டு – வேப்பம் பிண்ணாக்கு).

அங்ககப் பொருள்கள் மண்ணின் தன்மையை மாற்றுவதால் (எடுத்துக்காட்டு-நிலமட்கு அதிகரித்தல்).

நூற்புழுக்கள் அழிக்கப்படுவதோடு, நூற்புழுக்களுக்கு எதிரி உயிரினங்கள் (சில வகை டிரைக்கோடெர்மா (TRICHODERMA) மற்றும் சூடோமோனஸ் (PSEUDOMONAS), பேச்சிலஸ் சப்டைலிஸ் (BACILLUS SUBTILIS), பாஸ்டுரியா பெனிடரன்ஸ் (PASTEURIA PENETRANS), பெசிலோமைசிஸ் (PAECILOMYCES) மற்றும் பொக்கோனியா (POCHONIA) அதிகரித்து நூற்புழுக்களை அழித்து விடுகின்றன. இவ்வாறாக, மண்ணின் தன்மையே பூச்சி மற்றும் நோய்ப் பிரச்சினைகளுக்கு அனுசரணையாக இருப்பதனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

சிவப்புக் கம்பளிப் பூச்சி, தனது புழுப் பருவம் முடிந்ததும் செம்மண்ணுக்குள் புகுந்து கூட்டுப்புழுவாகிறது. மண்ணுக்குள் மறைந்திருந்து வேர்களைத் தின்று பயிர்களைக் காயச் செய்யும். வேர்ப்புழு மண்ணுக்குள்ளேதான் கூட்டுப் புழுவாகிறது.

இலைகளைச் சேதப்படுத்தும் புரடீனியாப் புழுவானது களிமண் வயலில் 2.42 செ.மீ. ஆழத்திலும் ஆற்று வண்டல் பாங்கான நிலத்தில் 2.42 செ.மீ. ஆழத்திலும் மணற்பாங்கான மண்ணில் 2.42 செ.மீ. ஆழத்திலும் கூட்டுப் புழுவாகிறது.

உருக்குலைக்கப்படாத சூழலானது மண்ணில் மறைந்துள்ள முட்டை, புழு மற்றும் கூட்டுப்புழு பருவங்களுக்கு உகந்ததாகிவிடும். புரடீனியாப் புழு, வேர்ப்புழு, சிவப்புக் கம்பளிப்பூச்சி, அமெரிக்கன் காய்ப்புழு மற்றும் அண்மைக் காலத்தில் மக்காச்சோளத்தில் புதிதாக வந்துள்ள படைப்புழு போன்றவற்றின் கூட்டுப் புழுக்களை கோடைக் காலத்தில் ஆழமாக உழுவதன் மூலம் மண்ணிலிருந்து வெளிக்கொணர்ந்து சூரிய வெப்பம் மற்றும் பறவைகளுக்கு இரையாக்கலாம்.

நெல் வயல் வரப்புகளை் செதுக்கி ஒழுங்குபடுத்துவதன் மூலம் மண்ணுக்குள் புதைந்துள்ள முட்டைகள் (வெட்டுக்கிளி), மாவுப்பூச்சிகள் ஆகியவற்றை அழிக்க முடியும்.

இயற்கை உரங்களை (நன்கு மக்கிய பயிர்க் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், பசுந்தாள் உரங்கள், நன்கு மக்கிய தொழு உரங்கள்) இட்டு நிலமட்குச் சத்தினை அதிகப்படுத்தினால்தான் மண்ணின் உயிரியல் பண்புகள் வளமடையும். இதன்மூலம், பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளை அழிக்கவல்ல உயிர்களையும் (டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், பிவேரியா, மெட்டாரைசியம், பெசிலோமைசிஸ் போன்ற நுண்ணுயிரிகள் மற்றும் ஸ்டெனர்நீமா ஹெட்டிரோரேப்டிடிஸ் போன்ற நன்மை செய்யும் நூற்புழுக்கள்) மண்ணில் பெருக்க இயலும்.

இவ்வாறு மண்ணின் தரம் மற்றும் பண்புகளை முடிவு செய்யவல்ல காரணிகளைப் புரிந்து கொள்வதுதான் உண்மையான இயற்கை வேளாண்மைக்கு உறுதுணை புரியும்.

முனைவர் ந.முருகேசன்,
முன்னாள் பயிர் மருத்துவ நிலையப் பேராசிரியர் (ஓய்வு),
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கிள்ளிகுளம்,
திருநெல்வேலி.