திருமதி சே.விஜயா விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு
உதவி இயக்குநர்,
ச.கண்ணன் விதை சான்று அலுவலர் மயிலாடுதுறை.
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் உணவுப் பயிர்களில் நெல் ஒரு முக்கிய பயிராகும். இம்மாநிலத்தில் சுமார் 18 லட்சம் எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது மாநிலத்தில் மொத்த சாகுபடி பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியாகும். மொத்த நெல் சாகுபடி பரப்பளவில் 15.7 சதவீதம் குறுவைப் பருவத்திலும், 74.7 சதவிகிதம் சம்பா பருவத்திலும், 9.6 சதவிகிதம், நவரைப் பருவத்திலும் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பிரதான விவசாயமாகும். இது வழக்கமாக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில்
தொடங்கி ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இப்பருவங்களில் சுமார் 12 முதல் 13.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 107435 எக்டரில் நெர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 38441 எக்டர் குறுவைப் பருவத்திலும் 68988 எக்டர் சம்பா / தாளடி பருவத்திலும் 100 எக்டர் கோடை பருவத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது.
*சம்பா பருவம்:* நீண்டகால (130-150 நாட்கள்) பயிராகும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு பின் நடவு செய்யப்படுகிறது.
*தாளடி பருவம்:* குறுவை நெல் அறுவடை செய்யப்பட்ட நிலங்களிலோ அல்லது குறுகிய கால நெற்பயிர்கள் அறுவடைக்குப் பின்னரோ (அக்டோபர் – நவம்பர் மாதங்களில்) தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
*சம்பா / தாளடி* பருவத்தில் நீண்டகால (145 முதல் 160 நாட்கள்) மற்றும்மத்திய கால (120 முதல் 145 நாட்கள்) வயதுடைய இரகங்கள், பயிரிடும் சூழல் மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டுப் பயிரிடப்படுகிறது. பிரபலஇரகங்களான சி. ஆர் 1009,சி.ஆர் 1009 சப் ஒன்,ஆடுதுறை
51 போன்ற நீண்ட கால இரகங்களும், ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை46,
ஆடுதுறை 54.
கோ 43, கோ 50. கோ 52. மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, பிபீடி5204, சுவர்ணா சப் ஒன், எம்டியு 7029 போன்றஇரகங்களும், ஆர்என்ஆர் 15048, மத்திய கால இரகங்களும், என்எல்ஆர் 34449, அக்சயா, அம்மன், டிகேஎம் 13 போன்றவயதுடைய குறைந்த மத்தியகால இரகங்களும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.
*“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவினானே”* என்ற காலகூற்றின்படி வேளாண் பெருமக்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த நெல் இரகங்களைச் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்ற புதிதாக வெளியிடப்பட்டுள்ள இரகங்களையும், அவற்றின் குணாதிசயங்களையும் சாகுபடி முறைகளையும் தெரிந்து கொண்டு அந்த இரகங்களை பயிரிடலாம்.இந்த புதிய நெல் இரகங்களை உரிய பருவத்தில் தேர்வு செய்து பயிரிட்டுப் பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று துறை உதவி இயக்குனர் திருமதி.சே.விஜயா மற்றும் விதை சான்று அலுவலர் ச .கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விரிவாக கூறியுள்ளார்கள்
*ஆடுதுறை 60 (ADT 60)*
ஆடுதுறை 60 இரகம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் தாளடி மற்றும் லேட் சம்பா பருவத்திற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் விளைச்சல் தரும் மத்திய கால நெல் ரகமாகும். இது AD 01246 மற்றும் கோ-49 ஆகிய நெல் ரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு ரகமாகும். இந்த இரகத்தின் வயது சுமார் 130 முதல் 135 நாட்கள் ஆகும். நடுத்தர சன்னரகம், 120 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது, சாயாத தன்மை உடையது. முழுமையாக வெளிவந்த கதிர்கள், அதிகபடியான வளர்ந்த நாற்றுக்கள், சீரான பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சி, மணிகள் உதிராத தன்மைக் கொண்டது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 18.5 கிராம். அதிக அரவைத் திறன் (68 சதவிகிதம்) கொண்டது. இந்த இரகம் பூச்சி

(புகையான், தண்டு துளைப்பான், இலை சுருட்டு புழு மற்றும் பாக்டீரியல் இலை கருகல் நோய், குலை நோய்) நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. ஒரு எக்டேருக்கு சராசரியாக 6,280 கிலோ (ஏக்கருக்கு சுமார் 25 மூட்டைக்கு மேல்) மகசூல் தரக்கூடியது, இது ஏடிடீ 46 இரகத்தை விட 13.2 சதவிகிதம் அதிகமாகும்.

*ஆடுதுறை 59 (ADT 59)*
2024 ம் ஆண்டில் கார். குறுவை. சொர்ணை வாரி. கோடைக் காலங்களுக்கு ஏற்ற ஆடுதுறை 59 இரகம் ஐ.ஈ. டீ 22075 மற்றும் ஆடுதுறை 48 ஆகியவற்றை இனக்கலப்புச் செய்து இந்த இரகம் உருவாக்கப்பட்டது. உருண்டையான அரிசி அமைப்புக் கொண்ட இது எக்டருக்கு 6100 கிலோ விளைச்சல் தரவல்லது. மேலும், அதிக அரவைத் திறன் (75 சதவிகிதம்) மற்றும் முழு அரிசி காணும் திறனும் (66 சதவிகிதம்) கொண்ட இந்த இரகத்திற்குக் குறைந்த இடுபொருட்களே தேவைப்படுகின்றது. இந்த இரகம் வளம் குறைந்த மண்ணிலும் சாகுபடிச் செய்ய ஏற்றதாகும்.முழுமையாக வெளி வந்த இதன்கதிர்கள்வெண் மஞ்சள் நிற மணிகளையும், மிகக் குறைந்த பதர்களையும் கொண்டிருப்பது இதன் சிறப்பியல்பு களாகும். பாக்டீரியா இலையுறைக் கருகல், குலைநோய், துங்ரோ வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாகவும், குருத்துப் பூச்சி, இலைமடக்குப்புழு. பாக்டீரியா இலைக்கருகல். இலையுறை அழுகல் மற்றும் மஞ்சள் கரிப்பூடடை நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. இட்டிலி மற்றும் பலகாரங்கள் செய்ய ஏற்ற இந்த இரகத்தில் 19.4 பிபிஎம் துத்தநாகச்சத்து உள்ளது. ஆயிரம் நெல் மணிகளின் எடை 22.4 கிராம்
*ஆடுதுறை 58 (ADT 58)*
ஆடுதுறை 58 இரகமானது, ஏடீடி 39 மற்றும் கோனார்க் இரகங்களை பெற்றோராகக் கொண்டு, 2023 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது தாளடிமற்றும் பின் தாளடிப் பருவங்களில் பயிரிடக் கூடிய மத்திய கால (125 – 130 நாட்கள்) இரகமாகும். இது எக்டருக்குச் சராசரியாக 6100 கிலோ விளைச்சல்தரவல்லது. இந்த இரகம் அதிக எண்ணிக்கையிலான கதிர்களை உடைய தூர்களையும். அடர்த்தியான அடித்தூர் மற்றும் சாயாத உறுதியான தண்டமைப்பு கொண்டதாகவும் காணப்படுகிறது. நடுத்தரச் சன்ன அரிசியை உடைய இந்த இரகத்தின்ஆயிரம் நெல் மணிகளின் எடை 16.5 கிராம் ஆகும். இது நல்ல அரவைத் திறன் (72.65 சதவிகிதம்) மற்றும் முழு அரிசி காணும் திறன் ஆகியவற்றைக்கொண்டுள்ளது. குலைநோய், செம்புள்ளி, இலையுறை அழுகல் இலைமடக்குப்புழு மற்றும்தண்டுத் துளைப்பான் ஆகிய நோய் மற்றும் பூச்சித்தாக்குதலுக்கும் மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. இது ஏடிடீ 39 இரகத்திற்குச் சிறந்த மாற்று இரகமாகப் பயிரிடப்படுகிறது.
*ஆடுதுறை 52*
ஆடுதுறை 52 இரகம்
சீ. ஆர் 1009 மற்றும் /ஏ.டி. டீ 49 ஆகியவற்றை இனக்கலப்புச் செய்து உருவாக்கப்பட்டது. நடுத்தர உயரம். நடுத்தரத் தூர்க்கட்டும் திறன் மற்றும் சாயாத தன்மை கொண்டது. எக்டருக்கு சராசரி 6002 கிலோ விளைச்சல் தரவல்லது. அனைத்திந்திய ஆய்வுகளின் படி மத்திய மண்டலத்தில் பி.பீ.டி5204 யை விட 27.6 சதவிகிதம் அதிக விளைச்சல் தரவல்லது கண்டறியப்பட்டது. இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி,குலைநோய், குருத்து அழுகல், நெல் நிறமாற்றம் ஆகியவற்றிற்கு நடுத்தரத் தாங்கும் திறன் கொண்டது.மத்திய சன்ன வெள்ளை அரிசி. 1000 நெல்மணிகளின் எடை 16.9 கிராம் ஆகும். அதிக அரவைத்திறன் (67.7 சதவிகிதம்).முழு அரிசி காணும் திறன் (61.1 சதவிகிதம்) மற்றும் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.
*ஆடுதுறை 51*
ஆடுதுறை 51 இரகம் பிபிடி 5204 / மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகியவற்றை இனக்கலப்புச் செய்து உருவாக்கப்பட்டது. குறைந்த உரச்செலவில் துரிதமாக வளரும் தன்மை உடையது . எக்டருக்கு சராசரி விளைச்சல் 6595 கிலோவும், அதிக பட்ச விளைச்சல் 10035 கிலோவும் (திருவிசைநல்லூர். தஞ்சாவூர் மாவட்டம்) தரவல்லது குலைநோய், இலைச்சுருட்டுப்புழு மற்றும் குருத்துப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறனும். புகையான், இலையுறை அழுகல் மற்றும் இலையுறைக் கருகல் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. மத்திய சன்ன அரிசியாக இருந்த போதிலும். ஆயிரம் நெல் மணிகளின் எடை 23.9 கிராம் ஆகும். இது சி. ஆர். 1009 க்கு இணையானதாகும் அரவைத்திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் முறையே 70.3 சதவிகிதம் மற்றும் 60.5 சதவிகிதமாகும் சமையல் பண்புகள் மற்றும் உணவின் சுவை சீ.ஆர். 1009 க்கு இணையாக உள்ளது. மேலும், சமைத்த அரிசி ஒட்டாமலும், மிருதுவாகவும் இருக்கும் .சிற்றுண்டி வகைகள் மற்றும் இனிப்புக் கார வகைகள் செய்யவும் ஏற்றது.
*கோ 59*
கோ59 இரகம் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி /அப்போ ஆகியவற்றை இனக்கலப்புச் செய்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு சராசரி 5867 கிலோ விளைச்சல் தர வல்லது.அதிக விளைச்சல் 8676 கிலோ / எக்டர் (பந்த்நகர், உத்ரகாண்ட்) மற்றும் 8200 கிலோ / எக்டர் (தருமபுரி). நடுத்தரக் குட்டை மற்றும் வறட்சியைத் தாங்கும் பண்புகளை உடையது. வெண்முதுகு தத்துப்பூச்சி. இலைச்சுருட்டுப் புழு மற்றும் குலைநோய்க்கு மிதமான எதிர்ப்புதிறன் உடையது.ஆயிரம் நெல் மணிகளின் எடை 14.0 கிராம்.அதிக அரவைத் திறன் (65-75 சதவிகிதம்) முழு அரிசி காணும் திறன் (60 – 70 சதவிகிதம்) மற்றும் சிறந்த சமையல் பண்புகளைக் கொண்டது.

*கோ 58 (CO 58)*
வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்ட கோ 58 இரகம் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப்பொன்னி மற்றும் அப்போ ஆகியவற்றை இனக்கலப்புச் செய்து 2024 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. குறுகிய கால இரகமான இது (118 – 124 நாட்கள்) நீண்ட சன்னமான அரிசியைக் கொண்டுள்ளது. பின்சம்பா, தாளடி மற்றும் பிசானம் போன்ற பருவங்களில் நடவு முறையிலோ அல்லது நேரடி விதைப்பு முறையிலோ பயிரிட ஏற்றது.எக்டருக்கு 5858 கிலோ விளைச்சல் தரக்கூடிய இந்த இரகத்தின் 1000 நெல் மணிகளின் எடை 19.4 கிராம் ஆகும். இந்த நெல் இரகம் அதிக அரவை திறன் (62 சதவிகிதம்), முழு அரிசி காணும் திறன், வாசனையாகவும், மிருதுவானதாகவும். இடைப்பட்ட அமைலோசுடன். நன்கு நீளும் தன்மை கொண்டதாகவும் உள்ளதால், பிரியாணி மற்றும் துரித உணவு வகைகளுக்கு ஏற்றது. இலையுறைக் கருகளுக்கு எதிர்ப்புத் திறனும், வெள்ளை மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி, குலைநோய், துங்ரோ வைரஸ் மற்றும் பழுப்புப் புள்ளி நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது.
*கோ 56 (CO 56)*
சம்பா மற்றும் தாளடிப் பருவங்களுக்கு (130 – 135 நாட்கள்) ஏற்ற கோ 56 என்ற இரகம் 2023 ம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இது கோ ஆர் 50 மற்றும் சி. பி. 05501 ஆகிய இரகங்களை இனக்கலப்புச்செய்ததன் மூலம் உருவாக்கப்பட்டதாகும். இதன் விளைச்சல் திறன் ஏடீடி 49 ஐ விட10.26 சதவிகிதமும். பிபிடி 5204 ஐ விட14.30 சதவிகிதமும் அதிகம் (6372 கிலோ / எக்டர்) ஆகும். தண்டுத் துளைப்பான், ஆனைக்கொம்பன், குலைநோய், பாக்டீரியா இலைக்கருகல், இலையுறை அழுகல், பழுப்புப் புள்ளி நோய். இலையுறைக் கருகல், துங்ரோ மற்றும் நெல் மணிகளின் நிறமாற்றம் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறனைக் கொண்டது. வெள்ளைநிறமத்திய சன்னமான அரிசி கொண்ட இந்த இரகம், நல்ல அரவைத் திறனும் (67 சதவிகிதம்). முழு அரிசிகாணும் திறனும் (64.10 சதவிகிதம்) கொண்டது.இதன் சாதமானது நீளும் தன்மை கொண்டிருப்பதால் (1.61 சதவிகிதம்) சமைப்பதற்குச்சிறந்ததாகவும், அதிக உபரி ஆகும் தன்மையும் பெற்றுள்ளது.
*கோ 53 (CO 53)*
கோ 53 என்ற இந்த இரகம், 2020 ம் ஆண்டு, பி.கே.எம் (ஆர்) 3 மற்றும் நொறுங்கன் இரகங்களை இனக்கலப்புச் செய்து உருவாக்கப்பட்டது. குறுகிய கால வறட்சியைத் தாங்க கூடியதாகவும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பயிரிட ஏற்ற இரகமாகும். கோ 53 இரகம் குட்டைப் பருமனுடன். வெண்மை நிறஅரிசியைக் கொண்டுள்ளது. அதிக முழுஅரிசி காணும் திறன் கொண்ட இந்த இரகத்தின் (69.6சதவிகிதம்) ஆயிரம் மணிகளின் எடை 24 கிராம்ஆகும். மேலும், இதன் முழு அரிசி காணும் திறன்59.6 சதவிகிதம் ஆகும். மானாவாரியில் எக்டருக்கு 3718 கிலோ விளைச்சல் தரவல்ல இந்தஇரகம், இலையுறை அழுகல், இலைப்புள்ளி, துங்ரோ வைரஸ் மற்றும் குலைநோய் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. அண்ணா (ஆர்) 4 இரகத்தைக் காட்டிலும் கோ 53இரகத்தின் வேர்கள் நீளமாகவும், அடர்த்தியாகவும், வறட்சி யைத் தாங்கும் தன்மையையும் கொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் வறட்சியால்பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் பயிரிடஏற்றதாக உள்ளது.
*கோ 43 (சப் 1) (CO 43 Sub 1)*
அதிக நீர்த்தேக்கத்தைத் தாங்கி வளரும் கோ 43 (சப் 1) இரகமானது. கோ 43 மற்றும் எப் ஆர் 13 ஏ ஆகிய இரகங்களைக் கலப்புச் செய்து, மரபணுக் குறிப்பான்கள் உதவியுடன் தேர்வுசெய்யப்பட்டு 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் வயது 135-140 நாட்களாகும். இதன் சராசரிவிளைச்சல் எக்டருக்கு 6000 கிலோவாகும். இந்த இரகம் குலைநோய், பாக்டீரியா இலைக்கருகல், துங்ரோ வைரஸ் பழுப்பு இலைப்புள்ளி மற்றும் இலையுறைக் கருகல் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. மத்திய பயிர் இரகங்கள் வெளியீட்டுக் குழுவின் மூலம், அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக் தமிழநாடுகழகத்தால் இந்த இரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரகம் அதிக நீர்த்தேங்கும் இடங்கள் மற்றும் உவர் நிலங்களிலும் பயிரிட ஏற்றதாகும்.

*திருச்சி 5 (TRY 5)*
உவர் நிலங்களில் பயிரிட ஏற்றக் குறுகிய காலஅளவு (115 – 120 நாட்கள்) கொண்ட இந்த நெல் இரகம், 2022 ம் ஆண்டு திருச்சி 2 இரகத்தை மரபு உருமாற்றம் செய்து உருவாக்கப்பட்டதாகும்.இந்த இரகம், எக்டருக்குச் சுமார் 5100 கிலோவிளைச்சல் தரவல்லது. சன்னமான அரிசியையுடைய இந்தசமையலுக்கு ஏற்ற மத்தியஇரகம், அதிகஅரவைத் திறன் மற்றும் முழு அரிசி காணும்திறனையும் கொண்டுள்ளது.
*கேகேஎம் 1 (KKM1)*
2024 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகம். கதிரியக்கம் மூலம் மரபணு மாற்றம் அடைந்த வெள்ளைப் பொன்னியிலிருந்து உருவாக்கப்பட்ட தாகும். இது முன் குறுவை. முன்கார், பிந்திய பிசானம் ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. 120 நாட்கள் வயதுடைய இந்த இரகம் அதிக விளைச்சல் (6102 கிலோ / எக்டர்) தரவல்லது. நடுத்தர உயரம். நிமிர்ந்த செடி, சாயாத தன்மை, நெருக்கமான செடி அமைப்பு மற்றும் முற்றிலும் வெளிவந்த நெருக்கமான கதிர்கள் ஆகியவை இதன் சிறப்பியல்புகளாகும். இந்த இரகத்தின் ஆயிரம் நெல் மணிகளின் எடை 15.6 கிராம் ஆகும். மத்திய சன்னமான வெள்ளை அரிசியைக் கொண்ட இந்த இரகம், அதிக அரவைத் திறன். முழு அரிசி காணும் திறன் மற்றும் நடுத்தர அமைலோஸ் அளவினைக் கொண்டுள்ளது. இது சமைத்தப்பின் நல்ல வெண்மை நிறத்துடன் ஒட்டமாலும், சீராகவும் உள்ளது. சாதம் மற்றும் மாவுப்பண்புகள் வெள்ளைப் பொன்னிக்கு இணையாகக் காணப்படுகிறது. தண்டுத் துளைப்பான் மற்றும் இலை மடக்குப்புழுவிற்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடஏற்ற இந்த இரகம், குலைநோய், இலையுறைக்கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோய்களுக்குமிதமான எதிர்ப்புத்திறனைக் கொண்டுள்ளது.
*டிகேஎம் 15 (TKM 15)*
2022 ம் ஆண்டு டிகேஎம் 12 மற்றும் ஐஇடி 2160 வறட்சியைத் தாங்கவல்ல இந்த இரகம். இரகங்களை ஓட்டு சேர்த்து உருவாக்கப் பட்டதாகும். இந்த இரகத்தின் வயது 115 – 120 நாட்கள் ஆகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் விதைப்புக்கும். வடகிழக்குப் பருவமழைக் காலமான. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விதைப்பதற்கும் ஏற்றது. நடுத்தா உயரம். அதிகத் தூர் கட்டும் திறன். அடர்த்தியான கதிர்கள் மற்றும் சாயாத தன்மை கொண்ட இந்த இரகம் மானாவாரியில் 3995 கிலோ / இந்த பகுதிப்பாசன முறையில் 4217 கிலோ / எக்டர். விளைச்சல் தரவல்லதாகும். வெள்ளைநிற அரிசியை அதிக அரவைத்திறன் உடைய இந்த நடுத்தரச் சன்ன 62.9 சதவிகிதம் (68 சதவிகிதம்) இரகம். திறனையும் கொண்டது. முழு அரிசி மற்றும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் ஆகிய பூச்சித் தாக்குதலையும், குலைநோய். இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், மற்றும் இலைப்புள்ளி நோய் மற்றும் துங்ரோ வைரஸ் ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.
*ASD 21 (ASD 21)*
2023 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஏஎஸ்டி 21 இரகம், ஏஎஸ்டி 16 மற்றும் மஞ்சள் சாரடை ஆகிய இரு இரகங்களை இனக்கலப்புச் செய்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. முன் குருவை, முன்கார் மற்றும்பிந்திய பிசான பருவங்களில் பயிரிட ஏற்ற இந்த இரகம் 120 நாட்கள் வயதுடையது. எக்டருக்கு 6330 கிலோ விளைச்சல் தரவல்ல இந்த இரகம் நடுத்தர உயரம், நிமிர்ந்த, சாயாத செடி அமைப்பு மற்றும் நெருக்கமான மணிகளைக் கொண்டது.குட்டையான பருமனும், வெண்மையான அரிசியையும் கொண்ட இந்த இரகத்தின் 1000மணிகளின் எடை 24.4 கிராம் ஆகும். அதிகமான முழு அரிசி காணும் திறனையும் (59.3 சதவிகிதம்),நடுத்தர அமைலோஸ் (21.5 சதவிகிதம்) மற்றும் 4.1 சதவிகிதம் சாதம் காணும் திறனையும் கொண்டுள்ளது. சமைத்த பின் அரிசிகள் ஒட்டாமல் சீராகக் காணப்படும். மேலும், இந்த இரகம் தண்டுத் துளைப்பான். இலை மடக்குப்புழு. குலைநோய் மற்றும் இலையுறை அழுகல் ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.
*காரைக்கால் 5′ (KKAL 5)*
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட புதிய நெல் ரகம் ‘காரைக்கால் 5’ (KKAL 5) இந்த நெல் ரகம் ADT 45 / FL478 // CSR 27 என்ற மரபியல் சேர்க்கை (Pedigree / Cross derivative) மூலம் உருவாக்கப்பட்டது. மத்திய பயிர் வகை வெளியீட்டுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நெல் ரகம், சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களுக்கு ஏற்றது உப்புத்தன்மை தாங்கும் திறன்: ஆரம்ப வளர்ச்சி நிலை மற்றும் இனப்பெருக்க நிலையில் ஏற்படும் உப்புத்தன்மையை வெற்றிகரமாகத் தாங்கி வளரக்கூடியது. மத்திய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இந்த ரகம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் பயிரிடுவதற்கு ஏற்ற ரகமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நெல் ரகம், டெல்டா மற்றும் கடலோரப் பகுதி விவசாயிகளின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சொர்ணவாரி மற்றும் குறுவை ஆகிய இரு பருவங்களிலும் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது.இந்த ரகத்தின் மிக முக்கியமான அம்சம், மண்ணில் உள்ள உப்புத்தன்மையை (Salinity) தாங்கி வளரும் திறன் ஆகும். ஆரம்ப வளர்ச்சி நிலை மற்றும் இனப்பெருக்க நிலை என இரண்டு நிலைகளிலும் உப்புத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகளை இது திறம்பட எதிர்கொள்கிறது.115 முதல் 120 நாட்கள் பயிர் காலத்தைக் கொண்ட இந்த ரகம், வெள்ளை நிறமுடைய, நடுத்தர நீள சன்ன ரக அரிசியைக் கொண்டது. இது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்டீரியல் இலை கருகல் நோய், இலை குலை நோய், இலை உறை அழுகல் நோய். நெல் துங்குரோ வைரஸ். நோய்களுக்கு எதிராக இந்த ரகம் மிதமான எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.
*KKL(R) 4*
காரைக்காலில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (PAJANCOA & RI) உருவாக்கிய புதிய நெல் ரகம் தான் KKL(R) 4. இந்த ரகம் வெள்ளத்தால் ஏற்படும் பயிர் சேதத்தைக் குறைக்கப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது120 முதல் 125 நாட்கள் வயதுடைய இந்த இரகம் தாளடி பருவத்திற்கு மிகவும் ஏற்றது. வெள்ளம் மற்றும் தேங்கிய தண்ணீரைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. சாதாரண சூழ்நிலைகளில் ஹெக்டேருக்கு 6 டன்கள் வரையிலும், வெள்ளம் பாதித்த காலங்களில் ஹெக்டேருக்கு 4 டன்கள் வரையிலும் மகசூல் தரக்கூடியது. நடுத்தர தடித்த (Medium bold) அரிசியைக் கொண்ட இந்த இரகத்தின் 1000 தானிய எடை 22.3 கிராம் ஆகும். இது வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் நிலங்களை (Submergence stress) தாங்கி வளரக்கூடிய ஒரு காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் (Climate-resilient) நெல் ரகமாகும்.
பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு: இலைக்கருகல் மற்றும் தானிய நிறமாற்றம் போன்ற நோய்களுக்கு எதிராக மிதமான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ளது. அரிசியின் தரம்: அரிசி சீரான ஸ்டார்ச் (starch) அளவைக் கொண்டுள்ளதால், சமைப்பதற்கும் சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கும் மிகவும் ஏற்றது.
விவசாயிகள் தங்கள் வயல் சூழ் நிலைக்கும், விருப்பதற்கும்,ஏற்ற உயர் விளச்சல் தரக்கூடிய புதிய இரகங்களைத் தேர்வு
செய்யப்பட்ட ரகத்தின் தரமான சான்று விதைகளை வேளாண் விரிவாக்கமையங்களின் மூலமாகவோ அல்லது தனியார் கடைகளின் வாயிலாகவோ பெற்று
விதையின் தரத்தினை திருவாரூர் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில் உறுதி செய்து பரிந்துரைக்கப்படும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து அதிக விளைச்சலும் அதிக இலாபம் பெற்று
மயிலாடுதுறை மாவட்ட உணவு உற்ப்பத்தியை பெருக்குமாறு அன்புடன் அறிவுறுத்தப்படுகிறது.

More Stories
நூற்புழுக்களுக்கு எதிரான உயிரியல் போராளிகள்
ஐசிஏஆர்-கரும்பு இனப்பெருக்க நிறுவனம்…ஒரு பார்வை
சாகுபடி / நோய்மேலாண்மை