July 21, 2026

இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்

என்ற இலக்கோடு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல பயிர்களில் இரு மடங்கு உற்பத்தி அடைந்து விட்டோம்! ஆனால், `வருமானம் தலை கீழாக உள்ளது. சாகுபடிச் செலவுகள் உயர்ந்து நிகர வருமானம் மிகக்குறைவாக உள்ளது. இதனால் நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் தொடர்ந்து உணவுப் பயிர்களை சாகுபடி செய்வது போன்றவை பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், வேளாண் பல்கலைக் கழகம் இது குறித்து அவசரகால நவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

👉கால நிலை மாற்றம் – எல்-நினோ/சூப்பர்
எல்-நினோ, வெப்பக் கதிர் வீச்சுகளால் ஏராளமான பாதிப்புகள், இதில் பெரிதும் பாதிக்கப் படப்போவது நம் உழவர் சமுதாயம் தான். பாதிப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு முன்னறிவிப்புகளைச் (FORECASTING) செய்ய வேண்டும்!

👉வேளாண் தகவல் பரிமாற்றத்திற்கான ஊக்குநர்களாக வானொலி, தொலைக் காட்சி, பத்திரிக்கைகள், செல்லிடை அலைபேசிகள் மூலம் பல்வேறு சமூக வலைதள ஊடகங்கள் அரசு மற்றும் தனியார் துறையினர் நடத்தும் பயிற்சிகள், கண்காட்சி மற்றும் கருத்துக் காட்சிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்!
தகவல்களுக்கு பஞ்சமில்லை ஆனால்
பல போலியான விளம்பர யுத்திகளும் குறுக்கு வழியே சம்பாதிக்க நினைப்பவர்களும் இந்த சமூக ஊடகங்களில் பங்கேற் கின்றனர்.
எச்சரிக்கையுடனும் போலிகளை இனம் கண்டு கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

👉பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், பயறு வகைகள், காய்கறிகளை தங்கள் நிலத்தில் உற்பத்தி செய்து
கொள்வதில்லை. மாறாக சந்தை மற்றும் கடைகளில் வந்து பிறரைப் போல வாங்கிச் செல்வது வருத்தமாக உள்ளது. வீட்டில் இல்லத் தரசிகள், பிள்ளைகள் திட்டமிட்டு நம் வீட்டிற்குத் தேவையான வற்றை நாமே! ஏன் இயற்கையாகக் கூட உற்பத்தி செய்யலாமே / வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம், செங்குத்துத் தோட்டம் என எத்தனையோ எளிய வழி முறைகள் உள்ளதல்லவா?

👉தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி போராடி வருகிறர்கள் .அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்து விட்டு பின்னர் தள்ளுபடி தரமுடியால் திணறுகிறார்கள். ஏன் இந்த அவலநிலை! விவசாயிகள் கடன் வாங்காமல் விவசாயம் செய்ய என்ன வழி என்று ஆராயவேண்டாமா? பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், வேளாண் நிபுணர்கள் நிறைந்த நம் நாட்டில் “விவசாயிகளையும்” அவர்கள் பிரச்சனைகளையும் பற்றி ‘ஆராய்ந்து’…விடிவு காண ஆளே…இல்லையா?