October 26, 2026

ஆசிரியர் பக்கம்

வெப்ப அலை வீச்சுக்கு இடையே ஆங்காங்கே மழை பெய்து வருவது மகிழ்ச்சியே!

பயிர் சாகுபடி பரப்பு குறைவு! பாசனநீர் பற்றாக்குறை! இடுபொருட்கள் விலை ஏற்றம்! தொழிலாளர்கள் பற்றாக்குறை! பூச்சி நோய் தாக்குதல்!
என விவசாயிகளின் பிரச்சனைகள் தொடரும்போது விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை இல்லை!… ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அரிசி போன்ற உணவு தானியங்கள்
காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் விலை தாறுமாறாக ஏறி வருகிறது கூடிய சீக்கிரம் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் எட்டி விடப் போகிறது.

ஆனால் மக்களிடையே இது குறித்து ஒரு விழிப்புணர்வோ, அச்சமோ இல்லை!.. இலவசங்கள் கிடைக்கும் வரை இது குறித்து சிந்தனையே வராது? ரீல்ஸ் மோகம்! செல்போனிலேயே வாழ்ந்து வரும் நமது நாளைய எதிர்கால மன்னர்கள் நாசமாகி வருகின்றனர். நம் இளைஞர்களிடம் நமக்கும், நாளைய தலைமுறைக்கும் எப்படி உணவு கிடைக்கும்? தண்ணீர் கிடைக்குமா? சுத்தமான காற்று கிடைக்குமா? என்ற கேள்விகளை கேட்டு விழிப்படையச் செய்ய வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் இன்றைய வேளாண் துறையில் எழுந்துள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணா விடில் விளைவு விபரீதமாக தான் இருக்கும்.
அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தாலும், வீழ்ச்சி யடைந்தாலும் அதிகாரிகள் அப்படியே தான் உள்ளார்கள்! திட்டமிடலும், திட்டங்கள் தீட்டுவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி வரப்போகும் பேராபத்திலிருந்து நம் தமிழ் சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.

தற்போது வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் சர்வே முடிவுகள் வரும்போது நமது சாகுபடிப் பரப்பில் எவ்வளவு தூரம் சறுக்கியிருக்கிறோம் என்ற செய்தி கிடைக்கும்.வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பதே… விவேகம்! அனுபவம் வாய்ந்த வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் துறையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மாவட்ட அளவிலான அதிகாரிகளை இணைத்து அடிக்கடி ஆலோசனை செய்து அரசு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் தென்னை மரக்கன்றுகள் விற்பனை குறித்த ரீல்ஸ், விளம்பரங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் உணவு தானியங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்து, பயறு வகை பயிர்ளை தவிர்த்து தென்னங் கன்றுகளை நடவு செய்து வருகிறார்கள். டிஜிட்டல் சர்வே முடிவுகள் வந்தால் முழு விபரம் தெரியவரும்! எதிர்கால சந்ததிகள் தேங்காயை முக்கிய உணவுப் பொருளாக எடுத்துக் கொள்ளும் நேரம் நெருங்குகிறது.

இயற்கை ஆர்வலர்கள் ஒரு பக்கம் எப்படியாவது நஞ்சில்லா விவசாயம், நஞ்சில்லா உணவு தானிய உற்பத்தி எனப் பிரச்சாரம், இயக்கம், பாதயாத்திரை எனப் போராடினாலும் செவிசாய்க்க பெரிய அளவில் விவசாயிகள் தயாராக இல்லை!. வணிக முறையில் விவசாயத்தை வளர்த் தெடுக்கவே விரும்புகிறார்கள்.

சாதாரண A4 பேப்பர் உற்பத்தி செய்ய 8 லிட்டர் மறை நீர் மறைந்திருக்கிறது.
ஒரு வாழைப்பழத்திற்கு 300 லிட்டர் ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 3000 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறோம்.
தண்ணீர் தேவை கணினி உலகையும் விட்டு வைக்கவில்லை! ஒவ்வொரு செல்போன், கணிப்பொறி, ஏன் வேளாண்மை கருவிகளில் கூட மழை நீரின் தேவை ஒளிந்திருக்கிறது. எதிர்காலத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தான் குடிநீராக பயன்படுத்தும் நிலை வரலாம்!

இந்தியாவில் இளைஞர்கள் கூட்டம் zen-Z ரீல்ஸ்,சாட்ஸ், AI என தடுமாறாமல் அறிவியலை அறிந்து செயல்பட்டால் அகிலம் தப்பிக்கும். இல்லையெனில் எதிர்காலம் இருளில் மூழ்கி துயரமானதகவே முடியும். விழித்திடுத்து தோழா! விழிப்புணர்வு கொள்!!