வழிகாட்டும் 62 வயது முன்னோடி விவசாயி முத்துலெட்சுமி
புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் உள்ளது தோப்புப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். குறிப்பாக, பெண்கள் விவசாயத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெண்மணியில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் என்ற அளவில் பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதோடு, பால் மாடுகளை வளர்த்து, பால் விற்பனை செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இக் கிராமப் பெண்களுக்கு விவசாயப் பணிகளில் வழிகாட்டி வருபவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான 62 வயது பெண்மணி திருமதி மா. முத்துலெட்சுமி. இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோரும் விவசாயிகளே. இவரது கணவரும் விவசாயியே. இவரது வாரிசுகளும் விவசாயத்தில் இவருக்கு உறுதுணையாக உள்ளனர். இவர்களின் ஆதரவோடு, கிராம மக்கள் விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்ட குறிப்பாக, இயற்கை விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்ட உதவி வருகிறார் இப் பெண்மணி. இவரது ஏட்டுப் படிப்பு என்னவோ 5-வது வகுப்பு வரை மட்டுமே. ஆனால், விவசாயம் சார்ந்த பல்வேறு நலத் திட்டங்களை, விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களை விரல் நுனியில் வைத்துள்ளார்.
அவ்வப்போது வேளாண் துறை, கே.வி.கே வேளாண் அறிவியல் மையம் வம்பன் மூலம் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களை கிராம விவசாயிகளுக்கு, குறிப்பாக பெண்களிடம் அறிவித்து, தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். வேளாண் துறை அதிகாரிகளும் இவருக்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவிக்கும் திருமதி முத்துலெட்சுமி, வம்பன் கே.வி.கே. பயிர் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பெருமையாகக் கூறுகிறார்.
பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில், உழவர் மன்ற அமைப்பாளர், உழவன் நண்பன், ஆத்ம கமிட்டி உள்ளிட்ட அரசு ஆலோசனைக் குழுக்களில் திருமதி முத்துலெட்சுமி உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்புகள் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, அங்கு தெரிவிக்கப்படும் ஆலோசனைகள், திட்டங்களை கிராம விவசாயிகளிடம் தெரிவிக்கிறார் திருமதி முத்துலெட்சுமி. அத் திட்டங்களை, பயன்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்கிறார்.
திருமதி முத்துலெட்சுமியின் சீரிய செயல்பாடுகளை பாராட்டி பல்வேறு விருதுகளை, பல்வேறு நிறுவனங்களும் அவருக்கு அளித்துள்ளன. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சாதனையாளர் விருது, உலக மகளிர் தின விழாவில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு செம்மல் விருது, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விருது, 2020-ல் நடைபெற்ற உலக உணவு தின விழாவில் உணவு கதாநாயகி விருது, ரிலையன்ஸ் நிறுவன விருது, புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை திருமதி முத்துலெட்சுமி பெற்றுள்ளார்.
இத்தகைய விருதுகளைப் பெறுவதற்கு இவரது கடின உழைப்பே காரணம் என்கிறார். வேளாண் தொடர்பான அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்று, அதே கிராம விவசாயிகளிடம் தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார்.
வம்பன் கே.வி. கே. வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி & தலைவர், தொழில் நுட்ப விஞ்ஞானிகள் மற்றும் திட்ட உதவியாளர்கள்
எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பர் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
விவசாயம் மட்டும் அல்லாமல், எல்லா வீடுகளிலும் மாடுகளை வளர்த்து, அவற்றில் கிடைக்கும் பாலை மொத்தமாகப் பெற்று, கிரீன்கேர் நிறுவனம் என்ற பெயரில் பாலை விற்பனை செய்வதாகவும் கூறுகிறார் திருமதி முத்துலெட்சுமி.
விவசாயப் பணிகளில் தமது 15 வயது முதல் ஈடுபட்டு வருவதாகக் கூறும் திருமதி முத்துலெட்சுமி, இயற்கை விவசாயம் சார்ந்த பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருவதாகக் கூறுகிறார். விவசாயம் சார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்க தில்லி, குஜராத் போன்ற மாநிலங்களுக்குச் சென்று வருவதாகவும் கூறுகிறார்.
இயற்கை விவசாயியான திருமதி முத்துலெட்சுமி, பஞ்சகாவ்யம், மீன் அமிலம், மூலிகை பூச்சி விரட்டி உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறார். பஞ்சகாவ்யம் தயாரிப்பது எப்படி ? என்பது குறித்து அவர் விளக்குகிறார்.
பசுவின் சாணம் 3 கிலோ, பசு நெய் 500 மில்லி இரண்டையும் ஒன்று சேர்த்து காலை, மாலையில் நன்றாக கலந்து மூன்று தினங்களுக்கு வைக்க வேண்டும். பிறகு பசுவின் கோமியம் 3 லிட்டர், தண்ணீர் 3 லிட்டர் இரண்டையும் கலந்து 3 நாள்கள் வைக்க வேண்டும். பிறகு பசும்பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், இளநீர் 2, வெல்லம் 2 கிலோ மேலும் பூவன் வாழைப்பழம் 12 ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து 30 நாள்கள் மூடிவைத்தால், பஞ்ச காவ்யம் தயார் ஆகிவிடும். மாதந்தோறும் சுமார் ஒன்றரை டன் பஞ்ச காவ்யம் தயாரிப்பதாகக் கூறுகிறார். தேவையான மூலப் பொருள்களை விவசாயிகளிடம் இருந்து பெறுவதாகவும் அவர் கூறுகிறார். இப் பணிகளை மேற்கொள்ள சுமார் 20 பேர் பணிபுரிகின்றனர் என்கிறார். பஞ்ச காவ்யம் பயன்படுத்துவதால், பயிர் நன்றாக வளரும். பயிர்கள் பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்கும்.
அதுபோல, வயல்களில் வரப்பு ஓரங்களில் மீன் அமிலத்தை ஊற்றினால், எலிகள் வராமல் இருக்கும். இதனால், எலிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கலாம் என்கிறார்.
மண்புழு உரம் தயாரிக்கும் திருமதி முத்துலெட்சுமி ரு.1 லட்சம் வரை அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும், தற்போது அரசு இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இயற்கை விவசாய முறையில் உற்பத்தியாகும் நெல், காய்கறிகள் உடல் நலனுக்கு உகந்தது. எனவே, விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும். அதுபோல, பொதுமக்களும் இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், தானியங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திருமதி. முத்துலெட்சுமி.
தொடர்புக்கு – மா.முத்துலெட்சுமி
99424-43022

More Stories
அதிகாரிகளால் பாராட்டுப் பெற்ற இயற்கை விவசாயி வேலு
பலே…பலே ….இவ்வளவு நன்மைகளா ???பச்சைத்தங்கமாம் மூங்கிலால்……
வேளாண் பண்ணை மேம்பாட்டில் முனைப்புக் காட்டும் முன்னாள் ராணுவ அதிகாரி