தென்னையில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
மா.ரவி, ரா.ஜெகதாம்பாள், சி.பிரதிபா மற்றும் செ. பிரபாகரன்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
சேலம் – 636203.
கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் தென்னை உலக அளவில் 108 நாடுகளில் பயிரிடப்படுகிறது. தென்னையானது, தோட்டங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் அனைவரது வீடுகளிலும் இளநீருக்காகவும் தேங்காய்க்காகவும் வளர்க்கப்படுகிறது. தென்னையில் மகசூல் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகும். தென்னையில் மகசூலைக் குறைப்பதில் தென்னை விவசாயிகளுக்கு மிகவும் சவாலாக இருப்பவை காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன்வண்டு, கருந்தலைப் புழு, ஈரியோபைட் சிலந்தி மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் போன்றவை.
பூச்சிகள் காண்டாமிருக வண்டு









தென்னை பயிரிடப்படும் எல்லா இடங்களிலும் காண்டாமிருக வண்டுகள் காணப்படும். இவை தென்னையின் எல்லா வளர்ச்சிப் பருவங்களிலும் தாக்குதலை ஏற்படுத்தி, நேரடியாகவும் மறைமுகமாகவும் மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. தோப்பின் ஓரத்தில் உள்ள மரங்கள், வீரிய ஒட்டு ரக மரங்கள், கம்போஸ்ட் மற்றும் எருக்குழிகளுக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் சரியாகப் பராமரிக்கப்படாத தோப்பில் உள்ள மரங்களை இவ் வண்டுகள் அதிகமாகத் தாக்குகின்றன. இதன் தாக்குதலால் சுமார் 10 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இவை தென்னை தவிர, பாக்கு, பனை, எண்ணெய்ப்பனை, ஈச்சை, பேரீச்சை போன்ற பனை வகை மரங்களையும் தாக்குகின்றன.
சேத அறிகுறிகள்
இளம் கன்றுகளையும் வளரும் மரங்களையும் வளர்ச்சியடைந்த காண்டாமிருக வண்டுகள் தாக்குகின்றன. இவ் வண்டுகள் மரத்தின் நடுக்குருத்தில் மட்டை இடுக்கில் இருந்துகொண்டு, வெளிவரும் குருத்து மட்டையைக் கடித்துத் தின்னும். வெளிவந்த குருத்தானது, விசிறி போல முக்கோண வடிவில், கத்திரிக்கோலால் கத்தரித்து விட்டது போல காணப்படும். இளம் கன்றுகளைத் தொடர்ந்து காண்டாமிருக வண்டு தாக்கினால், அந்தக் கன்றுகளானது காய்ந்து விடும். அதேபோல, வளர்ந்த மரங்களில் வளர்ச்சியானது குன்றிவிடும்.
வாழ்க்கைப் பருவம்
தாய் வண்டானது தோப்புக்கு அருகில் உள்ள எருக்குழி, குப்பைக் கிடங்கு, மண்புழு உரத் தொட்டிகள் மற்றும் தென்னை நார்க் கழிவுகளிலும் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. புழுவானது மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன், பழுப்பு நிறத் தலையுடன் ‘சி’ வடிவத்தில் காணப்படும். புழுவானது, குப்பைக் கிடங்குகளிலுள்ள கழிவுகளை உண்டு வளர்ச்சியடைந்த பின்னர், கூட்டுப் புழுவாக மாற இவை எடுத்துக்கொள்ளும் காலம் 75 முதல் 190 நாள்கள் ஆகும். வண்டானது, கருப்பு நிறத்துடனும் மேற்பரப்பு வழுவழுப்பாகவும் காணப்படும். ஆண் வண்டுக்கு கொம்பானது பெண் வண்டை விட பெரியதாக இருக்கும். வண்டின் மொத்த ஆயுள் காலம் 3 முதல் 9 மாதங்கள் ஆகும்.
மேலாண்மை முறைகள்
தோப்பை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தோப்பில் பட்டுப்போன தென்னை மரம் இருந்தால், அதை முழுமையாக அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
எருக்குழிகளில் காணப்படும் காண்டாமிருக வண்டின் முட்டை, புழு, கூட்டுப் புழு மற்றும் வண்டுகளைப் பொறுக்கி அழிக்கவும்.
எருக்குழியில் பச்சை மஸ்கார்டின் என்ற மெட்டாரைசியம் பூஞ்சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்தும் காண்டாமிருக வண்டின் புழுக்களை அழிக்கலாம்.
நீண்ட இரும்புக் கம்பிகளைக் கொண்டு தென்னை மரத்தின் குருத்துகளின் இடுக்கில் உள்ள வண்டினை குத்தி எடுத்து அழிக்கலாம்.
பச்சையான தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து, பிளந்த பாகத்தில் தென்னங்கள்ளை ஊற்றி தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
நாப்தலீன் உருண்டைகளை மரத்துக்கு மூன்று என்ற அளவில் கீழ் மட்டை இடுக்குகளில் வைத்து வண்டுகளை விரட்டி அடிக்கலாம். வண்டுகளின் தாக்குதலைத் தடுக்க மூன்று அந்துருண்டைகளை நடுக்குருத்தைச் சுற்றியுள்ள மூன்று இலை மட்டை இடுக்குகளில் வைக்கவும்.
இளம் மரம் ஒன்றுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் இலை இடுக்குகளில் வேப்பங்கொட்டைத் தூள் மற்றும் மணல் (1:2) கிராம் என்ற விகிதத்தில் கலந்த கலவையை 150 இட வேண்டும்.
பிப்ரோனில் 0.4 ஜிஆர் குருணை மருந்தை 10 கிராம் அல்லது வேப்பங்கொட்டை தூள் 10 கிராம் எடுத்து துளையுடன் கூடிய பாலிதீன் பாக்கெட்டில் போட்டு 2 பாக்கெட்டுகள் வீதம் நடுக்குருத்தைச் சுற்றி வைத்துக் கட்டுப்படுத்தலாம்.
ரைனோலியூர் என்ற இனக் கவர்ச்சிப் பொறிகளை 2 ஹெக்டேருக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்தி, ஆண் மற்றும் பெண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
மாட்டுச்சாணக் கரைசலை பொறியாக அமைத்தும் வண்டுகளை எளிதாக பிடித்து அழித்திட முடியும். இதற்காக சம எடை சாணம் மற்றும் அரைத்த ஆமணக்கு விதை கலந்த நீரை அகல வாயுள்ள சட்டிகளில், சட்டிகளின் மேல் பகுதி தெரியும்படி ஏக்கர் ஒன்றுக்கு 4 என்ற விகிதத்தில் மண் மட்டத்தில் புதைத்து வைப்பதால், வண்டுகள் அதனுள் வீழ்ந்து சாகடிக்கப்படுகின்றன.
சிறிய மண் கலயத்தில் 1 கிலோ ஆமணக்கு பிண்ணாக்கை 5 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
சிவப்புக் கூன்வண்டு
சிவப்புக் கூன்வண்டானது தென்னை பயிரிடப்படும் இடங்களான கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்துகிறது. இவ்வண்டானது எல்லா வயதுடைய தென்னை மரங்களையும் தாக்கும் என்றாலும், இளம் வயதுடைய தென்னை மரங்கள் முதல் இருபது வயதுடைய மரங்களையே அதிகமாகத் தாக்குகிறது. இதன் தாக்குதலானது, காண்டாமிருக வண்டு மற்றும் குருத்தழுகல் நோய் தாக்கிய மரங்களில் அதிகமாகக் காணப்படும். மேலும், இடி விழுந்து பராமரிப்பு இல்லாமல் காய்ந்து போன தென்னை மரங்களில் இவை இனப்பெருக்கம் செய்யும்.
சேத அறிகுறிகள்
தாய் வண்டானது முட்டைகளை மரத்தின் தண்டில் உள்ள வெடிப்புகளிலோ அல்லது காயங்களிலோ இடுகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் புழுவானது குருத்து மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள மிக மென்மையான திசுக்களைத் தின்று சக்கைகளைத் துவாரத்தின் வழியே வெளியே தள்ளுகின்றன. பாதிக்கப்பட்ட மரத் துவாரத்தின் வழியே பழுப்பு நிறத் திரவமானது வெளியே வந்து கொண்டிருக்கும். தாக்கப்பட்ட மரத்தின் பகுதிகளில் துர்நாற்றம் வீசும். மரத்தின் தண்டுப் பகுதியில் காது வைத்துக் கேட்டால், புழுவானது கடித்து உண்ணும் சத்தம் கேட்கும். இவை தென்னை மரத்தைத் தவிர, பனை மரத்தையும் தாக்கவல்லது.
இளந் தென்னையை குறுகிய காலத்தில் தாக்கி அதிக அளவில் சேதம் விளைவிப்பது இந்த கூன்வண்டாகும். குறிப்பாக, 2-3 வருட வயது மரங்களில் தொடங்கி 10-15 வயதுடைய மரங்களைத் தாக்கி சேதப்படுத்தும். மேலும், 20 வயதான மரங்கள் கூட கூன்வண்டு தாக்குதலுக்கு உள்ளாகும். குட்டை மற்றும் ஒட்டு ரகங்களில் கூன்வண்டுகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். குருத்தடியில், இலையடியில் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய இளம் தென்னை மரங்களை சிவப்பு கூன்வண்டு அதிகம் தாக்குகிறது.
வாழ்க்கைப் பருவம்
கூன்வண்டானது, பழுப்பு நிறம் கலந்த சிவப்பாகவும், மார்புப் பகுதியில் ஆறு கருப்பு நிற புள்ளிகளையும் கொண்டிருக்கும். இவை மரத்தில் உள்ள காயங்களிலோ அல்லது துளைகளிலோ முட்டைகளை இடுகின்றன. புழுவானது வெளிறிய மஞ்சள் நிற உடம்புடனும் சிவப்பு நிற தலையுடனும் கால்கள் இல்லாமல் காணப்படும். புழுப் பருவமானது 36 முதல் 78 நாள்களைக் கொண்டது. பின்னர், இவை தண்டின் உள்ளேயே நார்களால் ஆன கூட்டுக்குள் சென்று, கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இதன் மொத்த ஆயுள் காலம் 4 மாதங்கள் ஆகும்.
இது நீண்ட உருவத்துடனும் சிவப்பு நிறத்துடனும் காணப்படுவதால், சிவப்புக் கூன் வண்டு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்ப்பகுதி தும்பிக்கை போன்று நீண்டு வளைந்திருப்பதோடு, உடலின் மேற்பகுதியில் 6 கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. நீண்ட மூக்கினால் வண்டு சிறிய துளையிடும் திறன் உடையது. பெண் வண்டானது, ஆண் வண்டுடன் இணைந்த மறுதினமே முட்டையிட ஆரம்பிக்கிறது.
தென்னையில் சிவப்புக் கூன்வண்டின் தாக்குதல் வருடம் முழுவதும் காணப்பட்டாலும், பருவ மழைக் காலங்களில் அதிகமான தாக்குதலை ஏற்படுத்தும். இந்த கூன்வண்டு குருத்து வழியாகவும் மர உச்சியின் தண்டுப் பகுதியிலும், மரத்தின் அடித்தண்டுப் பகுதியிலும் சிறிய துவாரங்களை ஏற்படுத்தி, முட்டைகளை இடுகின்றன. சுமார் 108 முதல் 112 நாள்கள் வாழும் தன்மை பெற்ற இவ் வண்டுகள், 120 முதல் 150 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இளந்தண்டுப் பகுதிக்குள் சென்று சோற்றுப் பகுதியைத் தின்று வாழ்கின்றன. இதனால் இளந்தண்டின் உள்பகுதி எங்கும் சுரங்கம் போன்ற துவாரங்கள் ஏற்பட்டு, மரம் எளிதாக முறிந்து விடுவதைக் காணலாம்.
வளர்ச்சியடைந்த வெண்நிறப் புழுக்கள் சக்கை மற்றும் நாரினால் கூடு அமைத்து, அதனுள் 12 முதல் 21 நாள்கள் உறக்க நிலையில் வாழ்ந்து இறக்கைகளும் கால்களும் கொண்ட முழு கூன் வண்டுகளாக உருமாறி, துவாரங்கள் வழியாக வெளி வருகின்றன. உறக்க நிலையிலிருந்து வெளிவந்த சில மணி நேரத்தில் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. புழுக்கள் இளந்தண்டினுள் சென்ற துவாரங்கள் வழியே சிவப்பு நீர் வெளிவந்து காய்ந்து சிவப்பு பிசின் போன்று காணப்படும். இப் புழுக்கள் தண்டினுள் காணப்படுவதன் அறிகுறியாகும்.
சிவப்புக் கூன்வண்டின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும் அறிகுறிகள்
மஞ்சள் நிறத்துடன் உள் மற்றும் நடு இலையடுக்குகளில் உள்ள இலைகள் வாடியது போன்று காணப்படும்.
மட்டைகளின் அடிப்பாகத்தில் நீள வெடிப்புகள் காணப்படும்.
இளம் மரங்களின் நுனிப்பகுதி அழுகி ஒருவித துர்வாடை வீசும்.
தண்டு மற்றும் மரத்தின் அடிப்பாகத்தில் துவாரங்கள் காணப்படும்.
துவாரங்களின் வழியாக கூன் வண்டின் இளம் புழுக்கள் தின்று துப்பும். தென்னை நார்கள் வெளிப்படும்.
துவாரங்களில் இருந்து பழுப்பு நிறத் திரவம் வெளிவரும்.
கூர்ந்து கேட்டால் சிவப்பு கூன்வண்டின் இளம்புழுக்கள் தென்னை மரத்தின் தண்டுப்பகுதியை தின்னும்போது ஏற்படுத்தும் சத்தத்தினை கேட்க முடியும்.
மரத்தின் அடியிலும் மட்டையின் அடியிலும் கூட்டுப் புழுவின் கூடு அல்லது முழு வளர்ச்சியடைந்த வண்டு அல்லது தின்னப்பட்ட நார்கள் ஆகியவை காணப்படும்.
மேலாண்மை முறைகள்
தோப்புகளில் இடி விழுந்து பராமரிப்பு இல்லாமல் காய்ந்து போன மரங்களை வேரோடு அப்புறப்படுத்தி, அழிக்க வேண்டும்.
மரங்களில் காயம் எதுவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தண்டுப் பகுதியில் துளைகள் இருப்பின், அவற்றை சிமெண்ட் கலவை கொண்டு பூச வேண்டும்.
பச்சை மட்டைகள் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெட்டுவதாயின், தண்டிலிருந்து 120 செ.மீ. தள்ளி வெட்ட வேண்டும்.
நுனி, நடுக் குருத்து மற்றும் மட்டை இடுக்குகளில் வேப்பங்கொட்டை தூள் மணல் (1:2) கலந்த கலவையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைப்பதினால், காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிவப்பு கூன்வண்டு முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
இரண்டு ஹெக்டேருக்கு ஓர் இனக் கவர்ச்சிப் பொறியினை பெர்ரோலியூர் வைத்து கூன்வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
கரும்பு மொலாசஸ் இரண்டரை கிலோ, ஈஸ்ட் 5 கிராம், அசிடிக் அமிலம் 5 மி.லி. போன்றவற்றுடன் நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகள் ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
குருத்தழுகல், இலையழுகல் மற்றும் கண்டாமிருக வண்டுகளால் தாக்கப்பட்ட மரங்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாவதால், அந்த மரங்களை முதலில் பூஞ்சாணக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி, பாதுகாக்க வேண்டும்.
குளோரான்ட்ரானிலிப்ரோல் (6 மில்லி மருந்து 10 மில்லி நீர் என கலந்து திசுக்களின் உள்ளே ஊடுருவிச் செயலாற்றக்கூடிய) வேர்கள் மூலம் 45 நாள்கள் இடைவெளியில் 2 அல்லது 3 தடவை உட்செலுத்தி புழுக்களை அழிக்க முடியும்.
துவாரங்கள் வழியாக வெளியே வந்துவிட்ட கூன்வண்டு மட்டை இடுக்குகளில் மறைந்து வாழ்கின்றன. இளம் மரங்களில் காணப்படும் முதிர்ந்த ஓலைகளையும், காய்ந்த பண்ணாடைகளையும் அகற்றி, கொண்டை பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டுகளைப் பிடித்து அழிக்க முடியும்.
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்
தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப் புழு, ஈரியோபைட் சிலந்தி போன்ற பூச்சிகள் தாக்கினாலும், சமீப காலங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயானது பெருமளவில் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இவை அனைத்து விதமான தென்னை ரகங்களில் காணப்பட்டாலும், சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை போன்ற குட்டை ரகங்களையே அதிகமாகத் தாக்குகின்றன. இப் பூச்சிகள் தென்னையைத் தவிர, வாழை, சப்போட்டா போன்ற பயிர்களையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன.
சாதகமான சூழ்நிலை
அதிகமான வெப்பம், வறட்சி மற்றும் காற்றில் குறைந்த அளவு ஈரப்பதம் போன்றவை இப் பூச்சிகளின் பெருக்கத்துக்கு சாதகமான காரணிகளாகும்.
சேத அறிகுறிகள்
இளம் பூச்சிகளும், வளர்ச்சியடைந்த பூச்சிகளும் ஓலைகளின் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. பின்னர், இவை தேன் போன்ற கழிவுப் பொருளை வெளியேற்றுகின்றன. கழிவுப் பொருளானது கீழ் மட்ட அடுக்கில் உள்ள தென்னை ஓலைகளின் மேற்பரப்பில் படிகின்றன. இவற்றின் மீது கரும்பூஞ்சாணம் படர்வதால், இலைகளானது கருமை நிறமாகக் காட்சியளிக்கும். இதனால் ஒளிச் சேர்க்கையானது பாதிக்கப்பட்டு, மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
வாழ்க்கைப் பருவம்
தாய்ப்பூச்சியானது நீள் வட்ட வடிவ, மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியாக இலைகளுக்கு அடியில் ஒழுங்கற்ற சுருள் வடிவத்தில் இட்டுச் செல்கின்றன. இளம் பூச்சிகள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் மெல்லிய மெழுகு நூலிழைகளுடன் காணப்படும். சுருள் வடிவ வெள்ளை ஈயானது மற்ற வெள்ளை ஈக்களை விட மூன்று மடங்கு உருவத்தில் பெரியவை. இறக்கைகளில் ஒழுங்கற்ற வடிவத்தில் ஒரு ஜோடி பழுப்பு நிறத் திட்டுகள் காணப்படும். இவை காற்றின் மூலம் பரவி அடுத்தடுத்த தோப்புகளில் உள்ள மரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை முட்டையில் இருந்து வளர்ச்சியடைந்த பூச்சியாக மாற எடுத்துக் கொள்ளும் காலம் 55 நாள்கள் ஆகும்.
மேலாண்மை முறைகள்
பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் இலைகளுக்கு அடியில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்களைக் குறைக்கலாம்.
ஓர் ஏக்கருக்கு மஞ்சள் ஒட்டும் பொறியினை (5 அடி நீளம் – ஒன்றரை அடி அகலம்) எட்டு என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சிகளைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், தாய்ப்பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம்.
கிரைசோபெர்லா இரை விழுங்கி பூச்சிகளை ஏக்கருக்கு 400 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
என்கார்சியா கூடலோப்பி ஒட்டுண்ணிகள் தாக்கிய வெள்ளை ஈக்களின் கூட்டுப்புழு இருக்கும் இலைத் துண்டுகளை வெட்டி, பத்து மரத்துக்கு ஓர் இலைத் துண்டு என்ற விகிதத்தில் இலைத் துண்டுகளை இலைகளின் அடிப்பரப்பில் வைத்து இலையோடு பிணைத்து கட்டி விட வேண்டும்.
மைதா மாவை ஒரு லிட்டர் தண்ணீருககு 25 கிராம் என்ற அளவில் எடுத்து கொதிக்க வைத்து, ஆறிய பின் கரும்பூஞ்சாணத்தின் மீது படும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதனால், கரும்பூஞ்சாணத்தின் மீது படரும் மைதா கரைசல், காய்ந்தவுடன் பூஞ்சாணத்தோடு சேர்த்து கீழே உதிர்ந்து விடும்.
பாதிப்பு அதிகமாகும்போது வேப்பெண்ணெய் 5 மில்லி மருந்தை 1 மில்லி ஒட்டும் திரவம் கலந்து இலைகளின் அடிப்பரப்பில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
தோப்புகளில் இயற்கை எதிரிகள் தென்படும்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாழை, கொய்யா, சீத்தா பழச் செடிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் தென்னந்தோப்புகளில் நடவு செய்வதன் மூலம் என்காரசியா ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
கருந்தலைப் புழு
தென்னையைத் தாக்கும் பல முக்கியப் பூச்சிகளில் கருந்தலைப் புழு மிக முக்கியமானதாகும். இந்தியாவில் கடற்கரையைச் சார்ந்து இருக்கும் நிலப்பரப்புகள், உப்பங்கழி (back water areas) பகுதிகள், ஆற்றுப்படுகை ஓரங்களில் உள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் உட்பகுதியில் உள்ள தென்னை மரங்களை இக் கருந்தலைப் புழு அதிகளவில் தாக்குகிறது. சிவப்புக் கூன்வண்டுக்கு அடுத்தபடியாக தென்னைக்கு பெருத்த சேதம் விளைவிப்பது இப் பூச்சியாகும். சாம்பல் நிறமுடைய அந்துப்பூச்சியால் நேரடிப் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலையின் அடிப்புறத்தின் பச்சையத்தை வெகுவாகச் சுரண்டி சாப்பிட்டு, விரைந்து வளர்ச்சியடையும் குணம் கொண்டவை. இதன் பெண் பூச்சி 100 முதல் 135 முட்டைகள் இடும் திறனுடையவை. புழுக்கள் சாம்பல் நிறத்தோடு கூடிய கருப்பு நிறத் தலையுடன் காணப்படுகின்றன. 45 நாள்களுக்குப் பின் கூட்டுப் புழுவாக மாறி 10 முதல் 12 நாள்களில் இறக்கையுடன் அந்துப்பூச்சிகளாக மாறி ஓலைகளில் தொடர்ந்து வாழ்க்கை நடத்துவதால், ஒரே பருவத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சேத அறிகுறிகள்
இவை எல்லா வயதுடைய மரங்களையும் தாக்குகின்றன. புழுக்களானது இலைகளின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டி உண்பதால், இலைகள் பச்சையம் இல்லாமல் தீய்ந்துபோனது போல காணப்படும். புழுக்கள் கழிவுப் பொருள்களையும் பசை நூலையும் கொண்டு செய்யப்பட்ட நூலாம்படையினுள் இருக்கும். இளம் வயதுடைய மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
கீழ் அடுக்கிலுள்ள இலை மட்டைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், இளமட்டைகள் மட்டும் பச்சையாகவும் தென்படும். தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தூரத்தில் இருந்து பார்க்கும்போது தீயினால் கருகியது போன்று காணப்படும். இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள் காணப்படும். எச்சத்தினுள் புழுக்களோ, கூட்டுப் புழுக்களோ தென்படும். புழுக்கள் இலைகளில் உள்ள பச்சையத்தை மட்டும் சுரண்டி உண்டுவிட்டு, நரம்புகளை விட்டு விடுவதால், இலைகள் சல்லடை போன்று காணப்படும். கருந்தலைப் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகளின் ஒளிச் சேர்க்கைத் திறன் குறைந்து 30 முதல் 40 சதவிகிதம் வரை மகசூல் குறைகிறது. வெயில் காலங்களில் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். எல்லா வயதுடைய தென்னை மரங்களிலும் இப் புழுக்களின் தாக்குதலைக் காணலாம்.
வாழ்க்கைப் பருவம்
வெண்மை கலந்த சாம்பல் நிற தாய்ப்பூச்சிகள் சுமார் 130 முட்டைகளை மொத்தமாக இலையின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைப் பருவமானது 5 நாள்களைக் கொண்டது. புழுவானது பச்சை கலந்த பழுப்பு நிறத்துடனும், கரும்பழுப்பு நிறத் தலை மற்றும் மார்புப் பகுதிகளையும் கொண்டது. புழுப் பருவமானது 42 நாள்களைக் கொண்டது. இவை மெல்லிய பட்டு நூலால் பின்னப்பட்ட கூட்டுக்குள் சென்று கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இவை கூட்டுப் புழுவில் இருந்து அந்துப் பூச்சியாக வெளியே வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 முதல் 15 நாள்கள் ஆகும். இதன் மொத்த ஆயுள் காலம் 2 மாதங்கள்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பாதிக்கப்பட்ட காய்ந்த இலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
மாலை வேளைகளில் 7 மணி முதல் 11 மணி வரையில் விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
கருந்தலைப்புழுத் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது ஒட்டுண்ணிகளை (உயிரியல் முறை) தேவையான அளவில் விடவும். பிரக்கானிட் ஒட்டுண்ணிகள் (Bracon brevicornis) ஏக்கருக்கு 2100 என்ற விகிதத்தில் (அ) பெத்திலிட் ஒட்டுண்ணிகள் (Goniozus nephantidis) ஏக்கருக்கு 1400 என்ற விகிதத்தில் விடவும். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்திருந்தாலோ அல்லது வேர் மூலம் செலுத்தியிருந்தாலோ ஒட்டுண்ணிகளை 21 நாள்கள் இடைவெளியில் 5-6 முறை வரை விடவும்.
பெத்திலிட், பிரக்கானிட் மற்றும் இலோபிட் குடும்பங்களைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளை ஒரு மரத்துக்கு முறையே 10 :10 :20 என்ற விகிதத்தில் விட்டு கருந்தலைப் புழுவின் புழு மற்றும் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்திருந்தாலோ அல்லது வேர் மூலம் மருந்து செலுத்தியிருந்தாலோ 21 நாள்கள் முடிந்த பிறகு ஒட்டுண்ணிகளை 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து 5 அல்லது 6 முறை விடவும்.
ஐந்து வயதுக்குள்பட்ட அல்லது சிறிய மரமாக இருந்தால், மாலத்தியான் (50 ஈசி) அல்லது குயினால்பாஸ் (25 ஈசி) 2 மி.லி. மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் அடிப்பாகங்களின் உள்ள நூலாம்படைகளின் மீது நன்கு படும்படி தெளிக்கவும்.
தாக்குதல் அதிகமுள்ள உயரமான மரங்களில் மோனோகுரோட்டோபாஸ் (36 எஸ்எல்) 10 மிலி + 10 மிலி தண்ணீரில் கலந்து ஆரஞ்சு நிறமுள்ள வேர் மூலம் தாக்கப்பட்ட மரங்களுக்குச் செலுத்தவும். தேங்காய் அறுவடையானது மருந்து செலுத்தப்படுவதற்கு முன்போ அல்லது 45 நாள்களுக்குப் பிறகோ செய்யவும்.
ஒட்டுண்ணிகளை மரத்தின் அடிப்பாகத்தில் விட வேண்டும். இவற்றை மரத்தின் உச்சியில் விடக் கூடாது. ஏனெனில், இரை விழுங்கிகளான சிலந்தி மற்றும் நாவாய்ப் பூச்சிகள் ஒட்டுண்ணிகளைச் சாப்பிடுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.
பனை மற்றும் அலங்காரப் பனை போன்றவை அருகில் இருந்தால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அப் பயிர்களில் காணப்படும். இப் பூச்சிகளை அழித்திட ஏற்பாடு செய்வதன் மூலம் பூச்சிகளை முழுமையாக அழித்திட முடியும்.
செதில் பூச்சி
இப் பூச்சியானது, தென்னை ஓலைகளிலும், பாளைகளிலும் கூட்டம் கூட்டமாக இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகளின் மேற்புறம் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் காய்ந்து விடும். செதில் பூச்சியானது மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் வட்ட வடிவமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
செதில் பூச்சி தாக்கப்பட்ட இலை மட்டைகளையும் ஓலைகளையும் வெட்டி தீ வைத்து எரித்து விட வேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் (30 மில்லி/லிட்டர்) என்ற அளவில் தெளித்து இப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
டைமீத்தோயேட் (30 ஈசி) அல்லது மோனோகுரோட்டோபாஸ் (36 எஸ்எல்) 2 மில்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நத்தைப் பூச்சிகள்
தென்னையின் ஓலைப்பரப்பைக் கடித்து அழிக்கும் இந்தப் பூச்சிகள் ஒருசில பருவ நிலையில் மட்டுமே காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்த நத்தை பூச்சியின் அந்துப் பூச்சி கரும்பச்சை நிறமுடையதாகும். இதன் முட்டைகள் 5 முதல் 7 நாள்களில் பொறித்து, புழுக்கள் வெளியாகின்றன. இந்தப் புழுக்களின் அடிப்பகுதி நத்தையைப் போன்று தட்டையாகக் காணப்படும். புழுக்களின் மேல் பகுதியில் வெள்ளை நிறக் கோடுகளுடன் நான்கு வரிசைகளில் கருப்பு நிறமுடைய மயிர்க் கற்றைகளும் காணப்படுகின்றன.
நத்தைப் பூச்சியில் இரண்டு இனங்கள் உள்ளன.
மேக்ரோ பிளக்டிரியா நரேரியா :
இதன் புழுக்கள் ஓலைப்பரப்பை தாக்கி, துவாரங்களை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்குதல் அதிகரிக்கும்போது, ஓலை இணுக்குகளில் ஈர்க்கு குச்சி தனிப்படுத்தப்படுவதால், பச்சை ஓலைகள் காய்ந்து தொங்குவதைக் காணலாம். இப் பூச்சியின் வளர்ச்சிக்கேற்ற சூழ்நிலைகளின் தாக்குதல் அதிகரிக்கிறது.
பாரசா லெப்பிடா :
இந்த நத்தைப் பூச்சியின் தாக்குதல் தமிழகத்தில் அதிக அளவில் காணப்படவில்லை.
கட்டுப்பாட்டு முறைகள்
விளக்குப் பொறி (light trap) அந்துப் பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழித்தல்.
மிக அதிக அளவில் தாக்கப்பட்ட சாய்ந்த மற்றும் பச்சை மட்டைகளை அடிவயிற்றில் மரத்துக்கு 4-5 மட்டைகள் வீதம் வெட்டி தனியாகத் தீ வைத்து எரித்துவிட வேண்டும்.
குளோரான்ட்ரானிலிப்ரோல் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் வீதம் கலந்து ராக்கர் (அ) பெடல் தெளிப்பான் கருவி மூலம் தெளிக்கலாம். டிராக்டரில் அதிக விசையுடன் கூடிய மருந்து தெளிப்பான் கருவியைப் பொருத்தியும் உயரமான மரத்துக்கு மருந்து தெளிக்கலாம்.
குளோரான்ட்ரானிலிப்ரோல் 6 மி.லி.யுடன் 10 மி.லி. தண்ணீர் கலந்து வேர் மூலம் தாக்கப்பட்ட மரங்களுக்கு 45 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை செலுத்தவும்.
கேந்திகோனா டிப்பியாலிஸ் என்ற நாவாய்ப் பூச்சிகளை (இரை
விழுங்கி) (Predator) தோப்பில் விட்டும் கட்டுப்படுத்தலாம்.
ஓலைப்புழு – (டர்னாக்கா அக்யூட்டா)
ஓலையின் பச்சை இலைப்பரப்பை தின்று ஈர்க்கு மற்றும் ஓலைப் பகுதிகளை மட்டும் விட்டு வைக்கும் பூச்சிகளில் டர்னாக்கா அக்யூட்டாவும் ஒன்றாகும். இப் பூச்சி பழுப்பு கலந்த வெண்மை நிறம் கொண்டதாகும். இப் பூச்சியினால் அதிக தூரம் பறக்க முடிவதில்லை. பெண் அந்துப் பூச்சியானது, ஓலை இணுக்கு அடிப்பாகத்தில் எப்போதும் வரிசை வரிசையாக முட்டை இடுகின்றன. புழுக்கள் மரப்பட்டையின் நிறத்துடனும், வளர்ச்சியடைந்த பின் பச்சை நிறத்துடனும் காணப்படுகின்றன.
புழுக்கள் முதிர்ந்த மற்றும் குருத்தோலைகளைத் தின்று வளர்கின்றன. புழுக்கள் பச்சை இலைப் பகுதியைத் தின்று விடுவதால், ஈர்க்கு எனப்படும் நடு நரம்புப் பகுதி மட்டும் தனியாக நிற்பதைக் காணலாம்.
பாதிக்கப்பட்ட மரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு போதிய இலைப் பரப்பு இல்லாமையால், பூம்பாளைகளில் குரும்பைகளும் இளங்காய்களும் உதிர்ந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்
இலைப் பரப்பைத் தின்று வாழும் புழுக்களைக் கட்டுப்படுத்த குளோரான்ட்ரானிலிப்ரோல் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மிலி எனும் அளவில் பயன்படுத்தலாம்.
குளோரான்ட்ரானிலிப்ரோல் 6 மிலி -10 மிலி தண்ணீர் எனும் அளவில் கலந்து வேரின் மூலம் செலுத்துவதால் இப் பூச்சியை அழித்திடலாம்.
பாதிக்கப்பட்ட மரத்தின் பட்டை இடுக்குகளில் காணப்படும் கூட்டுப் புழுக்களைச் சேகரித்து அழிப்பதும் இப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் சிறந்த முறையாகும்.
தோப்பில் விளக்குப் பொறியினை வைப்பதன் மூலம் அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து கவர்ந்து அழிக்கலாம்.
தென்னை எரிப் பூச்சி (கொந்தீலியா ரோட்டண்டா)
எரிப் பூச்சியின் தாய் அந்துப் பூச்சி சாம்பல் அல்லது கரும்சாம்பல் நிறத்துடனும் காணப்படுகிறது. இப் பூச்சி அதன் இறக்கைகள் திறந்து செங்குத்தாக வைத்திருப்பது இதன் சிறப்பு குணமாகும். இதன் சிறிய முட்டைகள் நீண்டு உருண்டு பறவை முட்டை வடிவத்தில் காணப்படுகின்றன. பெண் பூச்சியானது, சுமார் 62 முதல் 324 முட்டைகள் வரை இடும் திறன் படைத்ததாகும். இதன் புழுக்கள் நீண்டு, உருண்டு காணப்படுவதோடு, உடலின் மேற்பகுதியில் முள்கள் போன்ற முடிக்கற்றைகள் காணப்படுகின்றன.
இவை பச்சை ஓலைப் பரப்பைத் தின்று அழிப்பதால், பெரும் சேதம் ஏற்படுகிறது. இதன் கூட்டுப் புழுக்கள் வெள்ளை நிறத்தில் தென்னை ஓலை இணுக்குகளை ஒட்டி தொங்கி காணப்படுகின்றன.
கட்டுப்பாட்டு முறைகள்
ஓலைப் பரப்பில் காணப்படும் முட்டைகளைச் சேகரித்து அழிப்பது சிறந்த முறையாகும்.
தென்னந்தோப்பில் விளக்குப் பொறியை அமைத்து அந்துப் பூச்சிகளைச் சேகரித்து அழிக்கலாம்.
அசாடிராக்டின் 1 சதவிகிதம் மற்றும் குளோரான்ட்ரானிலிப்ரோல் மருந்துகளில் 6 மிலி-10 மிலி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்தி புழுக்களை அழிக்க முடியும்.
கேண்திகோனா என்ற நாவாய் பூச்சியை தோப்பில் பரவ விட்டுக் கட்டுப்படுத்தலாம்.
அசாடிராக்டின் 1 சதவிகிதம் மற்றும் குளோரான்ட்ரானிலிப்ரோல் மருந்தை 2 மிலி/ 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
தென்னை சாறு உறிஞ்சும் பூச்சிகள்
செதில் பூச்சிகள் ஆஸ்பிடியோட்டஸ் டிஸ்டிரெக்டர்
தென்னையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கின்றன. சுமார் ஏழு விதமான சாறு உறிஞ்சும் செதில் பூச்சிகள் தென்னையின் ஓலைப்பகுதியைத் தாக்குவதாக அறிய முடிகிறது. இவற்றில் ஆஸ்பிடியோட்டஸ் டிஸ்டிராக்டர் என்பது முக்கியமானது. இதன் பெண் பூச்சிகள் ஆண் பூச்சியை விட சற்று நீண்டும், இரண்டு ஜோடி சிறிய இறக்கைகளுடன் காணப்படுகிறது. ஆனால், பறப்பதில்லை. பெண் பூச்சி 50 முதல் 200 முட்டைகள் இடும் திறன் படைத்தது. இப் பூச்சி கெட்டியான சாம்பல் நிற உறைக்குள் இருந்து சாற்றை உறிஞ்சுவதால், அதன் உருவத்தைக் காண முடிவதில்லை. இவை ஓலை இணுக்குகளின் அடிப்பகுதியிலும், குரும்பைகளிலும், இளம் தேங்காய்களிலும் கூட்டமாகக் காணப்படுகின்றன.
பூம்பாளைகளை இவை தாக்கும்போது அவை வாடி அவற்றில் காணப்படும் குரும்பைகள் வாடி உதிர்ந்து, கொட்டி விடுகின்றன. தாக்கப்பட்ட ஓலைகள் மஞ்சள் நிறமடைவதால், பச்சையம் பாதிக்கப்பட்டு, மாவுப் பொருள் தயாரிக்கும் அளவு குறைகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்
பாதிக்கப்பட்ட மரத்தின் இலை மட்டைகளின் மீது 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி அசாடிராக்டின் 1 சதவிகிதம் மற்றும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 2 மிலி மற்றும் 1 மிலி ஒட்டுத் திரவம் (சேண்டோவிட்) கலந்து தெளிப்பான் மூலம் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்து, கள்ளிப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
தாக்கப்பட்ட இலை மற்றும் ஓலைகளை வெட்டி, தீ வைத்து எரிக்க வேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் என்ற அளவில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். மீன் எண்ணெய் ரோசின் சோப் 2.5 சதவிகிதம் கரைசலைத் தெளித்தும் செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
கைலோகோரிஸ் நைக்ரிட்டஸ் என்ற இரைவிழுங்கி பொறி வண்டுகளை நாற்றங்காலில் விட்டும் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மி.லி. அசாடிராக்டின் 1 சதவிகிதம் என்ற விகிதத்தில் கரைத்து தெளிப்பதனாலும், இப் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.
இப் பூச்சிகளைத் தின்று அழிக்கும் நன்மை தரும் பூச்சிகளும் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு வாழும் வேறு சில பூச்சிகளும் காணப்படுகின்றன. இவற்றை விட்டும் செதில் பூச்சியைக் கட்டுப்படுத்திட முடியும்.
தென்னை மாவுப் பூச்சி (அ) கள்ளிப் பூச்சி
இப் பூச்சிகள் இளம் சிவப்பு நிறமுடையவை. உடலின் மேலே வெள்ளை நிறப் போர்வை காணப்படுகிறது. நீண்டு உருண்ட வடிவமுடைய இப் பூச்சி மிக மிருதுவான உடலை உடையதாகும். இளம் பூச்சி நிம்ப் என அழைக்கப்படுகிறது. ஆண் பூச்சியில் சிறிய கண்ணாடி போன்ற இறக்கைகள் உள்ளன. பெண் பூச்சிகளில் இது காணப்படுவதில்லை. ஆண் பூச்சியில் இரண்டு ரோம சுழல் உடைய உணர் கொம்புகள் காணப்படுகின்றன. இப் பூச்சி பெரும்பாலும் நெருக்கமாக நடப்பட்ட நிழலில் நின்று வளரும் மரங்களை அதிகமாகத் தாக்குவதைக் காணலாம். செழிப்பாக வளரும் மரங்களை இப் பூச்சி விரும்பி தாக்குகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்
இப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட கரைசலில் ஏதாவது ஒன்றை முறைப்படி தெளிக்கலாம்.
மாலத்தியான் -0.1 சதவிகிதக் கலவை.
குளோரான்ட்ரானிலிப்ரோல் – 0.05 சதவிகிதக் கலவை.
அசாடிராக்டின் 1 சதவிகிதம் -5 மி.லி.
கரையான்
கரையான் தாக்குவதால் தென்னைக்கு நேரடியாக பாதிப்புகள் குறைவுதான். ஆனால், தகுந்த நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில், கரையான் அரித்து தண்டுப்பகுதி பொலிவிழந்து இறுதியில் மரம் பட்டுப்போய் விடும்.
மணற்பாங்கான மற்றும் செம்மண் பகுதி தென்னை நாற்றங்காலில் இதன் தாக்குதல் மிகுந்த அளவில் தென்னங்கன்றுகளைத் தாக்குகின்றன. சுமார் 20 சதவிகிதம் இளம் தென்னங்கன்றுகள் இதன் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நாற்றங்காலிலும் வயல்களிலும் நடப்பட்ட கன்றுகளில் உள்ள விதைத் தேங்காயின் நார்ப்பகுதியைத் தாக்கி அரித்து விடுவதால், வேர்கள் பாதிக்கப்பட்டு, கன்று வளர்ச்சி குன்றுகிறது. மேலும், ஓலைகள் கருகிக் காணப்படுகிறது.
கட்டுப்பாட்டு முறைகள்
காய்ந்து விழுந்த இலை மட்டைகளை வெட்டி அப்புறப்படுத்தவும்.
தென்னந்தோப்புக்கு அருகில் உள்ள கரையான் புற்றை உடைத்து, அதில் உள்ள ராணி கரையானை தேடிப்பிடித்து அழிக்க வேண்டும்.
தாக்கப்பட்ட நாற்றங்கால் பகுதிகளில் தரை நன்கு நனையும்படி 100 சதுர அடிப் பரப்பளவுக்கு இமிடாகுளோப்பிரிட் 30 எஸ்சி 100 மிலி/100 லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டு, அடிப்பாகம் மற்றும் வேர்களில் 3 வாரங்கள் இடைவெளியில் 2 முறை ஊற்ற வேண்டும்.
நாற்றங்கால்களில் உள்ள நெற்று விதைக் காய்களின் மீது ஆற்றுப்படுகை மணலைப் போட்டு மூடினால் கரையான் தாக்குதல் ஓரளவு குறையும்.
வளர்ந்த மரத்தில் தரையிலிருந்து 1 மீட்டர் உயரம் வரை தண்டுப்பாகத்தில் சுண்ணாம்புக் கரைசலைப் பூச வேண்டும்.
மண் போர்வையிடும் போது தென்னை மரத்து தண்டினை ஒட்டி, காய்ந்த ஓலைகளைப் போடாமல் ஓர் அடி தள்ளிப் போட வேண்டும்.
ஈரியோபைட் சிலந்தி
இச் சிலந்தியானது, 1984 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குறைந்த அளவு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், கேரளத்தில் 1997-98 ஆம் ஆண்டுகளில் இச் சிலந்தியானது அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தியது. இவை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றின் தாக்குதல் தென்னையில் வருடம் முழுவதும் காணப்படும். பொதுவாக, கோடை காலங்களில் அதிகமாகக் காணப்படும். இவை காற்றின் மூலமும், பூச்சிகள் மூலமாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட காய்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதன் மூலமும் பரவுகின்றன.
சேத அறிகுறிகள்
சிலந்திகள் இளம் குரும்பைகளில் காம்பின் தோலுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், 1 முதல் 3 மாத இளம் குரும்பைகளில், தொட்டுக்குக் கீழே முக்கோண வடிவில் வெளிர் மஞ்சள் பிற திட்டுகள் தோன்றும். தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சியடைந்து, இளங்காயாக மாறும்போது பழுப்பு நிறப் பகுதியின் அளவு அதிகமாவதுடன், நீளவாக்கில் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன. இதனால், தேங்காய்கள் சிறுத்து விடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் அளவும் குறைந்து விடுகிறது. சில சமயங்களில் பாதிக்கப்பட்ட காய்களில் இருந்து பிசின் வருவதைக் காணலாம். மேலும், பாதிக்கப்பட்ட காய்களில் நெட்டிகள் கடினமானதாக இருக்கும். அதனால் நெட்டிகளை உரிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இதன் தாக்குதல் அதிகரிக்கும்போது இளங்காய்கள் உதிர்ந்து விடுகின்றன. இப் பூச்சி தாக்கிய மரங்களில் ஐம்பது முதல் அறுபது சத விளைச்சல் குறைகிறது.
வாழ்க்கைப் பருவம்
சிலந்தியானது கருவுற்ற பூக்களையே தாக்குகின்றன. இவை சுமார் 200 முதல் 250 மைக்ரான் நீளமும் 36 முதல் 52 மைக்ரான் அகலமும், இரண்டு ஜோடி கால்களையும் கொண்டது. ஈசியோபைட் சிலந்தியைக் கண்களால் காண முடியாது. உருப்பெருக்கியின் மூலம் மட்டுமே காண முடியும். இவை வெளிறிய நிறத்தில் நீளமான புழு போன்ற உடலமைப்பைக் கொண்டது. இதனுடைய மொத்த ஆயுள் காலம் 10 முதல் 12 நாள்களைக் கொண்டது.
இச் சிலந்தி கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ளது (ஒரு மில்லி மீட்டரில் 10-ல் ஒன்று) இதன் வாய் உறுப்புகள் கடித்து தின்னவும், உறிஞ்சும் வகையிலும் அமைந்துள்ளது. இச் சிலந்தியில் நான்கு கால்கள் மட்டுமே காணப்படுவது இதன் சிறப்பு குணமாகும். நீண்ட உடலும், தலையும், மார்பும் ஒன்றாக இணைந்தும் வயிற்றுப் பாகம் மட்டும் நீண்டு சுருங்கியும் காணப்படும். 10 முதல் 12 நாள்களைக் கொண்டது.
இச் சிலந்தி தென்னையின் பெண் பூ பருவம் அடையும் நாளில் புல்லி வட்டத்திலும் சென்று கருப்பையின் மேல் பகுதியை ஒட்டி வாழ்கின்றது. கருப்பையின் மேல் தோலில் காணப்படும் மொரிஸ்டம் திசுவில் காணப்படும் சாறை உறிஞ்சி இவை வளர்ச்சியடைகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பல்களின் மேல்தோல் நீண்ட வெடிப்புகளுடன் காணப்படுகிறது. காய்கள் வளர்ச்சியடையும்போது காய்களின் தோல் பகுதி முழுவதும் சொறி போன்று காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசிியமாகிறது.
கென்தாலி குட்டை மற்றும் சௌகாட் ஆரஞ்சு குட்டை ரகம் ஈரியோபைட் சிலந்திக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.
வருடம் ஒன்றுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2.0 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 3.5 கிலோ பொட்டாஷ் உரங்களையும் இத்துடன் 50 கிராம் போராக்ஸ் 1 கிலோ ஜிப்சம் மற்றும் 500 கிராம் மெக்னீசியம் சல்பேட் ஆகிய நுண்ணுரங்களையும் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
தென்னையில் ஊடுபயிராக சணப்பை வருடத்துக்கு இரண்டு முறை விளைவித்து மடித்து உழ வேண்டும்.
அசாடிராக்டின் 1 சதவிகிதம் (5 மில்லி/லிட்டர்) அல்லது வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் (30 மில்லி/லிட்டர்) மருந்தினை 45 நாள்கள் இடைவெளியில் மரத்தின் குருத்துப் பகுதியிலும், மேலே உள்ள ஆறு தென்னங் குலைகளிலும் படும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
இளந்தேங்காய்களை கடித்து நாசம் செய்யும் பிராணிகள் (எலி, அணில் மற்றும் மரநாய்)
அணில் அல்லது எலி போன்ற பிராணிகள் ஒருசில குறிப்பிட்ட மரங்களை மட்டும் தேர்வு செய்து அவற்றில் உள்ள இளம் தேங்காய்களில் துளையிட்டு, நீரைக் குடித்து நாசம் செய்கின்றன. துவாரமிட்ட இளந்தேங்காய்கள் உடனடியாக வாடி விடுவதில்லை. தேங்காயின் காம்புப் பகுதியை அடுத்து துளையிடும்போது நார்ப் பகுதியானது பூசணம், பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, காய்கள் வாடி அல்லது அழுகி காம்பிலிருந்து தொடர்ந்து விழுகின்றன. மாதந்தோறும் இவ்வாறு நுற்றுக்கணக்கான காய்கள் விழுவதைக் காண முடிகிறது.இவ்வாறு விழுந்து சேதமடையும் தேங்காய்கள் மொத்த விளைச்சலில் 15 முதல் 17 சதவிகிதம் வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு முறைகள்
தீங்கு தரும் இப் பிராணிகளின் கூடுகளை அழிப்பதால், அவை பெருகுவதைத் தடை செய்ய முடியும். எலிக்கொல்லி மருந்தான புரோமோடைலான் கேக்கை மரத்துக்கு ஒரு துண்டு எனும் அளவில் மரத்தின் மட்டை இடுக்குகளில் வைப்பதாலும், அணில் மற்றும் எலி போன்றவற்றை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும்.
எலிகள்
தென்னை சாகுபடியில் எலிகள் எல்லா தருணத்திலும் தாக்குகின்றன. குறிப்பாக, வயல் எலி மற்றும் ஜெர்பில் வகை எலிகள் நாற்றங்காலில் தென்னை நாற்றுகளைத் தாக்குகின்றன.
சேதார அறிகுறிகள்
நாற்றங்கால்களில் எலிகள் நிலப்பரப்பில் மிக ஆழமான துவாரங்களை இட்டு வேர்களைத் தாக்குகின்றன.
நாற்றுக்களின் நடுக்குருத்து இலைகளின் அடித்தண்டுப் பகுதியைக் கடித்துத் தின்று விடுகின்றன.
குரும்பை மற்றும் இளநீர்ப் பருவத்திலும் கடித்து அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன,
கட்டுப்பாட்டு முறைகள்
10 கிராம் புரோமோடைலான் (0.005 சதம்) மெழுகுக் கட்டிகளை மரக் கிளைகளில் 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை வைக்கலாம்.
தேங்காய் கீற்றுப் பொறியை காய்களில்லாத செப்டம்பர் -நவம்பர் மாதங்களில் மரக்கிளைகளில் வைக்கவும்.
ஜிங்க் பாஸ்பைடு நச்சுப்பொறியை வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
நச்சுப்பொறி 95 பங்கு அரிசி குருணைக்கு 3 பங்கு தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு பங்கு ஜிங் பாஸ்பைடு கலந்த கலவையை வைக்கவும். அதன் பிறகு நச்சுப் பொறியை வைத்து எலிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
பட வரி – எருக்குழிகளில் காணப்படும் புழு
காண்டாமிருக வண்டு
முக்கோண வடிவில் இலைகள்
அடிமட்டைகளில் துவாரம்
காண்டாமிருக வண்டு – தாக்குதல் அறிகுறிகள்
சிவப்பு கூன் வண்டு
தண்டு மீது துளைகள்
வெளியே தள்ளப்பட்ட மரநார்கள்
சிவப்பு கூன் வண்டு – தாக்குதல் அறிகுறிகள்
வி- வடிவ அச்சு
காய்களின் மீது பழுப்பு நிறத் திட்டுகள்
பிசின் போன்ற திரவம் வெளிப்படும்.
மஞ்சள் நிறத் திட்டுகள்
ஈரியோபைட் சிலந்தி- தாக்குதல் அறிகுறிகள்
சுரண்டப்பட்ட இலைகள்
தீய்ந்த தோற்றம்
வறண்ட திட்டுகள்
கருந்தலைப்புழு – தாக்குதல் அறிகுறிகள்
புழு
பூச்சி
தாக்குதல் அறிகுறி
நத்தைப் பூச்சி
இலைகளில் செதில்கள்
இலையில் மஞ்சள் புள்ளிகள்
தேங்காயில் செதில்கள்
செதிள் பூச்சிகள் – தாக்குதல் அறிகுறிகள்
மாவுப்பூச்சிக் கூட்டம்
வளர்ச்சி குன்றிய இலைகள்
சுருக்கமுடைய இலைகள்
மாவுப்பூச்சி (அ) கள்ளிப்பூச்சி – தாக்குதல் அறிகுறிகள்
கரையான்
மண்ணினாலான வரிகள்
சேதமடைந்த மரப்பட்டை
கரையான் தாக்குதல் அறிகுறிகள்
எலிகள் – தாக்குதல் அறிகுறிகள்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம் (கேவிகே)
சந்தியூர், சேலம் – 636 203.

More Stories