July 26, 2026

சிறுதானியங்களின் மகத்துவங்கள்

சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. அரிசி, கோதுமை, பார்லி போன்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிக சக்தியைத் தரக்கூடியவை. இவற்றில், அதிக அளவில் நார்ச்சத்தும், கால்சியம், இரும்பு, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் பைடிக் அமிலம் குறைந்து காணப்படுகிறது. இவற்றை அதிக அளவு உள்கொள்வதால், உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சிறுதானியங்கள் இயற்கை நமக்கு அளித்த சத்தான உணவாகும். அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தாம்.

சிறுதானியங்களில் கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, வரகு மற்றும் குதிரைவாலி போன்றவை பெருமளவு வறண்ட நிலப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் மற்றும் மானாவாரியாகவும் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தன. எனவே, இவை நீர்வளம் இல்லாத பகுதிகளான புன்செய் நிலங்களில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுவதால், புன்செய் நிலப்பயிர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

கேழ்வரகு :

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஊட்டமளிக்கக்கூடிய சத்து மிகுந்த மலிவான உணவாகும். கேழ்வரகில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் முக்கிய உயிர்ச்சத்துகளும் உள்ளன. கேழ்வரகில் மிகவும் அதிகப்படியான சுண்ணாம்புச் சத்து காணப்படுவதால், (100 கிராமில் ஏறத்தாழ 344 மில்லி கிராம் உள்ளது). எலும்பு தேய்மானத்தைக் குறைந்து எலும்புகளை உறுதி செய்யும். சிறு வயதிலிருந்தே இவ் வகையான உணவுகளை உண்ணும்போது மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற எலும்பு சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. கேழ்வரகு உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்க உதவும். குடலுக்கு வலிமையையும் தரும். இதிலுள்ள டிரிப்டோபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வைக் குறைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

சாமை :

அசதியையும் தளர்ச்சியையும் நீக்குவதற்கு ஏற்ற சரிவிகித உணவு சாமை ஆகும். சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முக்கியத் தேவை நார்ச்சத்து, நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. இதனை உணவாக உட்கொள்ளும்போது நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கக்கூடிய ஒரு சிறந்த தானியம் சாமையாகும். ரத்தச் சோகையைக் குணப்படுத்தும். உடலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும். இது மட்டுமல்லாமல், வயிற்றுக் கோளாறுகளுக்கும் சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது.

தினை :

தேனும் தினையும் தெவிட்டாத பண்டம் என்பது நம் முன்னோர்கள் கருத்து. இத்தகைய சிறப்பு மிக்க தினையில் புரதச்சத்து மருந்து காணப்படுகிறது. 100 கிராம் தினையில் புரதச்சத்து 12.3 கிராம் மற்றும் 3.3 மில்லி கிராம் தாது உப்புகளும் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.

வரகு :

சிறுதானியங்களில் வரகு அதிக வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. வரகரிசியில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் உள்ளன. வரகு உடல் கனத்தைக் குறைக்கக் கூடியது. மார்பு வலியைப் போக்கும் தன்மை கொண்டது. கோடை காலங்களில் வரகரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

பனிவரகு :

சிறுதானியங்களிலேயே மிகவும் குறைந்த நாள்களில் (65 முதல் 75 நாள்களில்) விளைச்சலைத் தரக்கூடிய பயிர் பனிவரகாகும். பனி வரகு பனியின் ஈரத்திலேயே விளையக் கூடியது என்று பொருள்படவே இப் பயிருக்கு பனிவரகு என்று பெயர் இடப்பட்டிருக்கிறது. குறைந்த தண்ணீர் நிறைந்த விளைச்சலையும் லாபத்தையும் தரக்கூடிய ஒரே பயிர் சிறுதானியங்கள் மட்டுமே. பனிவரகில் சோளம், கம்பு, அரிசியை விட கூடுதலான புரதச்சத்துள்ளது.

குதிரைவாலி :

இதன் கதிர்கள் குதிரையின் வால் போன்று காட்சியளிப்பதால், இது குதிரைவாலி எனப் பெயர் பெற்றது. சிறுதானியங்களிலேயே அதிகப்படியான இரும்புச்சத்தும், நார்ச்சத்தும், தாது உப்புகளும் குதிரைவாலி அரிசியில் உள்ளது. உதாரணமாக, 100 கிராம் குதிரைவாலி அரிசியில் 15.2 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 10.1 மில்லி கிராம் நார்ச்சத்தும் மற்றும் 4.4 மில்லி கிராம் தாது உப்புகளும் உள்ளன. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு குதிரைவாலி. இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தைச் சீராக்கும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும்.

சிறுதானியங்களில் உள்ள மருத்துவப் பயன்கள் :

உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது உடல் எடை சீராகக் குறைகிறது.

சிறுதானியப் பயன்பாட்டில் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் நோய்கள் வராமலிருக்க உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

சிறுதானியங்களில் உள்ள மாங்கனீஸ் என்ற தாது உப்பு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு ஏற்றதாகும்.

சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ் எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

சிறுதானியங்களில் மக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஆஸ்துமா குறைபாட்டையும் ஒற்றைத் தலைவலியையும் தடுக்கிறது.

நயாசின் (வைட்டமின் பி-3) அதிக அளவு கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது.

அன்றாடம் சிறுதானியங்களைப் பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை (type 2) அதாவது இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை.

                                     திருமதி சி.சிங்காரலீனா, பி.எஸ்சி., (விவ.), எம்.பி.ஏ.,                                 விதை ஆய்வு துணை இயக்குநர், மதுரை.    முனைவர் மு.சத்தியா,                                                               விதை ஆய்வாளர், உத்தமபாளையம்.