October 4, 2026

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் புகையான் நிலபர்வட்டா லூகன்ஸ்

*சேதத்தின் அறிகுறிகள்*

1) இதன் தாக்குதல் பயிரின் ஆரம்பம் முதல் அறுவடை வரை நீடிக்கும்.

2) இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டங் கூட்டமாக தூர்களிலும், தூரின் அடிப்பாகத்தைத் தட்டினால் புகையான் பூச்சிகள் பக்க வாட்டில் நகர்ந்து செல்வதைக் காணலாம்.

3) குஞ்சுகளும், தாய்ப்பூச்சிகளும் தரை மட்டத்திலிருந்து சற்று மேலே பயிரின் தண்டுப் பகுதியில் இருந்துகொண்டு அடிப்பாகத்தைத் தாக்கி சாற்றை உறிஞ்சுவதால் ஃபுளோயம் செல்கள் மூலம் சத்துக்கள் செல்வது தடைப்பட்டு நெற்பயிர் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும். தாக்குதல் அதிகமாகக் காணப் பட்டால் தண்டுப் பகுதியானது செயலிழந்து ஒடிந்து பயிரானது வலுவிழந்து இறுதியாக மடிந்து சாய்ந்துவிடும்.

4) இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது வயல்களில் அரை வட்ட வடிவமாக “பயிர் தீய்ந்தது”  போன்று ஆங்காங்கே திட்டுத் திட்டாகக் காணப்படும்.

5) முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும்.

*முட்டை பருவம்*

பெண் பூச்சியானது வெண்மையான நீண்டு உருண்ட மற்றும் நுனியில் சிறிது பெருத்த  9 முதல் 33 முட்டைகளை குவியலாக இலையின் நடுநரம்பிற்கு இருபுறமும் அல்லது இலையுறையில் வரிசையாக இடும். ஒரு பெண் பூச்சியானது 200 முதல் 300 முட்டைகள் வரை இடும்.

*இளம் குஞ்சுகள் பருவம்*

முட்டையிலிருந்து 5 முதல் 9 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். முதல் நிலை குஞ்சுகள் வெள்ளை நிறமாகவும், பின்பு பழுப்பு நிறமாகவும் மாறும் 5 வளர்ச்சி நிலைகளையுடைய இவை 13 முதல் 15 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளாக மாறும்.

*பூச்சி பருவம்*

பழுப்பு நிறமுடைய முழுவதுமாக வளர்ச்சியடைந்த புகையான்கள் தூர்களின் அடிப்பகுதிகளில் காணப்படும். ஒவ்வொரு பயிர் காலத்திலும் 2 அல்லது 3 தலைமுறைகள் தோன்றும்படி இதன் வாழ்க்கைச் சுழற்சி அமைந்துள்ளது. இவற்றின் வளர்ச்சிப் பருவம் 10 முதல் 20 நாட்களைக் கொண்டது.

*பூச்சிக் கட்டுப்பாடு*

1) தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்துதல் வண்டும்.

2) வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.

3) இதன் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்ட உடனே வயலில் தேங்கியுள்ள தண்ணீரைச் சுத்தமாக வடித்து விடவேண்டும்.

4) அதிகமான தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தழைச்சத்து உரங்களை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து பயிருக்கு அளிக்க வேண்டும்.

5) வயல்களில் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6)நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்து இதனைக் கட்டுப்படுத்தலாம்.

7) பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது அவற்றை தூர்களின் அடிப்பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும்.

8) விளக்கு பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்.

9) வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.

10) பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்

1.பாசலான் 35 EC 1500 மி.லி/ஹெக்டேர்
2.கார்ப்ரைல் 10 D 25 கி.கி/ஹெக்டேர்
3.மீ்த்தைல்டேம்மட்டான் 25 EC 1500 மி.லி/ஹெக்டேர்.