July 22, 2026

வெற்றி(லை) கொடி கட்டும் தோழிகள்

தேனி மாவட்டம், விளைபொருள்களுக்குப் பெயர் போன மாவட்டம். பல்வேறு வகையான பயிர்கள் கலவையாக இம் மாவட்டத்தில் பயிரிடப்படுகின்றன. தொழில் நிறுவனங்களைக் காட்டிலும், வேளாண்மையே இந்த மாவட்டத்தில் பிரதானம்.

இயற்கை சூழ்ந்துள்ள இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது சின்னமனூர். இங்கு திருமதி சாரதா (வயது 29) மற்றும் திருமதி பொன்மணி (36) ஆகிய இருவரும் தோழிகள். பட்டதாரிப் பெண்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வெற்றிலையில் மதிப்புக் கூட்டுப் பொருள்களைத் தயாரித்து, உள்ளூரிலும், பிற நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் இத் தொழிலை ஆரம்பித்து, ஒரு வருடமே ஆனாலும், பல்வேறு இடங்களிலும் பரவலாக பிரபலமாகி வருகின்றனர்.

இவர்கள் செய்யும் தொழில் குறித்தும் இவர்களது நோக்கம் என்ன என்பது குறித்தும் இருவரும் வேளாண் வணிக இதழுக்கு அளித்த பேட்டி இதோ –

நாங்கள் இருவரும் பி.காம். பட்டதாரிகளாக இருந்தாலும், அரசு வேலைக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ சென்று வேலை செய்ய விரும்பவில்லை. நாம் வசிக்கும் பகுதியில் என்ன தொழில் செய்யலாம் என யோசித்தோம். அப்போது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது கே.வி.கே. எனப்படும் கிஷன் விஞ்ஞான் கேந்திரா. இதில் வேளாண் அலுவலராக இருப்பவர் திருமதி ரம்யா. இவர், தொழில் செய்வதற்கு எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார், ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

நாங்கள் வசிக்கும் பகுதி வேளாண் சார்ந்த பகுதி என்பதால், வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்தோம். தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் வாழை, வெற்றிலை, கற்பூரவள்ளி, தூதுவளை ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறோம்.

வெற்றிலையில் ஓமம், சித்தரத்தை, கற்பூரவள்ளி, தூதுவளை ஆகியவற்றைச் சேர்த்து சளி பவுடர் தயாரித்து விற்பனை செய்கிறோம். அதுபோல, வெற்றிலை பவுடர் தயாரித்து,

உள்ளூர் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறோம். அவர்கள், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இத்தகைய பொருள்களைத் தயாரிக்க, கே.வி.கே. மூலம் சோலார் டிரையர் பெற்றுள்ளோம். அந்தக் கருவி எங்களுக்குப் பெரிதும் உதவியாக உள்ளது. வெற்றிலையின் மூலம் பீடா தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். வெற்றிலைக் கொடிக்காலில் ஊடுபயிராக முருங்கை, அகத்தி ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளோம். இவற்றை வீணாக்காமல், முருங்கைப் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். இவற்றைக் கொண்டு சூப், மிக்ஸ் ஆகியவற்றை தயாரித்து வருகிறோம்.

வெற்றிலைப் பவுடர் தயாரிக்க, 10 கிலோ வெற்றிலையைக் காய வைத்து அரைத்தால், ஒரு கிலோ பவுடர் கிடைக்கும். ஒரு கிலோ பவுடர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் 10 கிலோ பவுடரை ரூ.1,500-க்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு மாதத்துக்கு சுமார் 50 கிலோ முருங்கைப் பவுடர் தயாரிக்கிறோம்.

வெற்றிலையைக் கொண்டு விசேஷங்களுக்கு வெல்கம் டிரிங்க தயாரித்து கொடுக்கிறோம். இந்த டிரிங்கை ஒரு பாட்டில் ரூ.12-க்கு விற்பனை செய்கிறோம். வெற்றலைச் சாறு, தேன், வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றைக் கொண்டு இந்த வரவேற்பு பானத்தைத் தயாரிக்கிறோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இவைதவிர, ஆவாரம் பூ, கொய்யா, பீட்ரூட், தக்காளி ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து வருகிறோம். எங்களது தயாரிப்புகள் தற்போது பல்வேறு பகுதிகளிலும் பிரபலமடைந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகிறோம். வருமானம் நன்றாகவே உள்ளது. எனது தோழியும் நானும் மட்டுமே தற்போது இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களது நோக்கம், பெண்கள் இதுபோன்ற தொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும். தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதாகும். இதற்கு எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று ஒருமித்த குரலில் தெரிவித்தனர் தோழிகளான திருமதி சாரதா மற்றும் திருமதி பொன்மணி.

தொடர்புக்கு – 918098533383