முனைவர் தி.ராஜ் பிரவின்
இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மலரியல் ஆராய்ச்சி நிலையம், தோவாளை-629 302
நமது வேளாண் ஏற்றுமதி சந்தைகளில் கடந்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உள்ளுர் மற்றும் உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பருவ நிலை மாற்று பிரச்சனைகள் (CLIMATE CHANGE ISSUES ) மற்றும் வேளாண் சந்தையில் விலை, ஏற்ற இறக்கங்களை போன்றவை நமது வேளாண் சந்தைகளிலும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் தற்போதைய நடைமுறை சூழலில் முந்தைய பாரம்பரிய ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருட்கள் பல தொடர்ந்து வந்தாலும் தற்போது வெளி நாட்டு சந்தைகளில் தேவைகளுக்கு ஏற்ப நமது வேளாண் சார்ந்த விளை பொருட்ளை மதிப்பு கூட்டியும், பதப்படுத்தப்பட்டும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பலவேறு தடைகள், கொள்கை மாற்றங்கள், இடையூறுகளை தாண்டியும் பல புதிய நாடுகள்,வேளாண் சந்தைகளுக்கு நமது வேளாண் விலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது உயர்ந்தே காணப்படுகிறது. கடந்த 2015முதலான வேளாண் சார்ந்த ஏற்றுமதி புள்ளி விபரங்களை பார்க்கும் போது தற்போது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை 298 என்ற அளவில் இருந்து வெகுவாக உயர்ந்து தற்போது 2026ல் 438 பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல சிறப்பு தயாரிப்புகள் (NICHE PRODUCTS ) வெளிநாடுகளில் உருவாகியுள்ள புதிய சந்தை வாய்ப்புக்கள் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டு , ஏற்றுமதி செய்யபடுகிறது.தற்போதைய ஏற்றுமதி சந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யவும், அதனை பன்முகப்படுத்தவும் (DIVERSIFICATION) மூன்று வகையிலான முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வகையான பொருட்கள் ஏற்றுமதி, புதிய சந்தைகளை தேடி பொருட்களை ஏற்றுமதி செய்வது மற்றும் மதிப்பு கூட்டி விற்பனை செய்வது போன்ற செயலாக்கங்கள் வாயிலாக இந்திய வேளாண் பொருட்கள். ஏற்றுமதி என்பது தற்போது உலகளவில் மிள திறன் கொண்டதாகவும் (RESILENT) மற்றும் உலக சந்தையில் போட்டி போடும் திறன் கொண்டதாகவும் உருவாகி உள்ளது.
*அரிசி ஏற்றுமதி புள்ளி விபரங்கள்*

நமது நாட்டின் வேளாண் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்தின் (APEDA) புள்ளி விபரங்களை பார்க்கும் போது தற்போதைய 2025 – 26 புள்ளி விபரங்களின் படி 21.57 மில்லியன் டன்கள் பாசுமதி அரிசி சுமார்
11.54 மில்லியன் டாலர்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருட புள்ளி விபரங்களை பார்க்கும் போது அதிகரித்து காணப்பட்டாலும் மதிப்பின் அடிப்படையில் குறைந்தே காணப்படுகிறது. அனால் நமது மத்திய அரசின் வர்த்தக துறையின் புள்ளி விபரங்களை கானும் போது நமது அரிசி ஏற்றுமதிகளின் மதிப்பு
தற்போதைய மே 2026 ல் 5 சதவீதம் உயர்ந்து 1.02 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அடுத்தாக நமது வேளாண் சார்ந்த ஏற்றுமதிகளில் கடல் உணவுப் பொருட்கள் (MARINE PRODUCTS ) ஏற்றுமதி என்பது தற்போதைய காலக்கட்டத்தில் 728 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் கடந்த ஆண்டை காட்டிலும் (730 மில்லியன் டாலர்கள்) சற்று குறைந்துள்ளது. இது போல வாசனை பொருட்கள் 403 மில்லியன் டாலர்களாகவும், பழங்கள் மற்றும் காய் கறிகள் ஏற்றுமதி 309 மில்லியன் டாலர்களாகவும், எண்ணெய் வித்துக்கள் 103 மில்லியன் டாலர்களில் இருந்து 94 மில்லிலியன் டாலர்களாகவும், தேயிலை ஏற்றுமதி 66 மில்லியன் டாலர்களில் இருந்து 56 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. மற்றும் வேளாண் பொருட்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இறைச்சி, பால் மற்றும்
பால் சார்ந்த பொருள்கள், மற்றும் கோழித் தொழில் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி என்பது கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமாக உயர்ந்துள்ளது. 630 மில்லியன் டாலர்கள் என்ற அளவிலும், தானிய தயாரிப்புகள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிப்புகள் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏற்றுமதி அளவை விட உயர்ந்துள்ளது. முந்தைய 265 மில்லியன் டாலர்கள் என்ற அளவை விட உயர்ந்து 277 மில்லியன் டாலர்கள் அளவிலும், காபி ஏற்றுமதிகள் 209 மில்லியன் டாலர்கள் என்ற அளவிலும், எண்ணெய் புண்ணாக்கு என்பது 89 மில்லியன் டாலர்கள் என்ற அளவை காட்டிலும் உயர்ந்து 111 மில்லியன் டாலர்கள் என்றும் காணப்பட்டது.
*சந்தை அடிப்படையிலான விரிவாக்க முயற்ச்சிகள்*
தற்போது நமது உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் தேவைகள், வர்த்ததக மற்றும் வணிக வாய்ப்புகள் அடிப்படையில் நமது தற்போதைய விரிவாக்கப் பணிகளை சந்தை (MARKET LED EXTENSION ) அடிப்படையில் மாற்றி அமைப்பது அவசியம். தற்போதைய ஏற்றுமதி சந்தைகளின் தேவைக்கேற்ப நமது வேளாண் விளைப் பொருட்களை உற்பத்தி செய்யும் வண்ணம் ரகங்களை தேர்வு செய்தும், சாகுபடி பணிகளை மேற்கொள்வது அவசியம். மேலும் தற்போது உலகளவிலும், நமது தேசத்திலும் பரிந்துரைக்கப்பட்ட நல்ல விவசாய நடைமுறைகள் (GOOD AGRICULTURAL PRACTICES) பின்பற்றி
சாகுபடி செய்யும் போது மிகவும் ஆரோக்கியமான பாதுகாப்பான உணவை நம்மால் உற்பத்தி செய்ய முடிவதுடன், சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான பாதிப்பு இல்லாமல் நம்மால் செயல்பட முடியும். மேலும் நமது ஏற்றுமதி சந்தைகளின் தேவைக் கேற்பவும் நமது வேளாண் விளைப் பொருட்களை உற்பத்தி செய்தும் பதப்படுத்தியும், மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் கிராமபுறங்களில் புதிய வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி வாயிலாக அதிகளவு அந்நிய செலவாணி (FORIEGN EXCHANGE ) பெற முடியும். தற்போது அரிசி ஏற்றுமதிகளில் பாஸ்மதி அரிசியை போல் பல பாஸ்மதி அல்லாத பாரம்பரிய அரிசி வகைகளுக்கு (TRADITIONAL FOLK VARIETIES )
உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் நல்ல விற்பனை மற்றும் வணிக, வர்த்தக வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய நம்முடைய பல பருவ மாற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும்,மிகவும் குறைந்தளவு வேளாண் இடு பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் இப் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி ஊக்குவித்தும், முறைப்படுத்தியும், விஞ்ஞானரீதியாக பதப்படுத்தியும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் முயற்சிகளில் நமது விவசாய சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள்,
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FARMER PRODUCER ORGANIZATIONS)
மற்றும் வங்கிகள், காப்பீடு நிறுவனகள், வேளாண் சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டால் நமது மாநிலம் மற்றும் நமது தேசத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து மிகவும் எளிதாக,
தரமான வேளாண் மற்றும் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து அதிகளவில் லாபம் பெற முடியும்.
தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் புவி சார் குறியீடு (GEOGRAPHIC INDICATION ) கொண்ட வேளாண் மற்றும் சார்ந்த பொருட்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்கி செயல்பட்டு வருகிறது. இத்தகைய பொருட்களுக்கு உள் நாட்டு சந்தைகளிலும், வெளி நாடுகளிலும் அதிகளவு வர்த்தக வாய்ப்புகள் உள்ள சூழலில் நமது விரிவாக்க முயற்ச்சிகள் இவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து சந்தைகளின் தேவையின் அடிப்படையில் ஏற்றுமதிகள் செய்ய வேண்டியது அவசியம்.
இறுதியாக தற்போதைய வேளாண் விளைப் பொருட்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிப்பது போல குறைந்தபட்ச
ஆதரவு விலை (MINIMUM SUPPORT PRICE ) போல் நமது விவசாயிகள், தொழில் முனைவோர், மற்றும் ஏற்றுமதியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டும், உள் நாட்டு சந்தை விலை நிலவரங்கள், சந்தைகளின் வரத்துகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் பருவம் தோரும், அல்லது வேளாண் சார்ந்த விளைப் பொருட்களின் தன்மைக் கேற்ப குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MINIMUM EXPORT PRICE ) நிர்ணயம் செய்தும், நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு நம்முடைய வேளாண் ஏற்றுமதிக்கு தேவைப்படும் புதிய அளவிலான கொள்கை மாற்றங்கள், சந்தை அடிப்படையிலான விரிவாக்க முயற்சிகளை நாம்
மேற்கொள்ளும் போது நம்மால் நம்முடைய வேளாண் விளைப் பொருட்களை பதப்படுத்தியும், மதிப்பு கூட்டியும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் வேளாண் சந்தைகளுக்கு நல்ல தரமான பொருட்களை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்து நமது விவசாயிகள் மற்றும் கிராமபுற பொருளதாரம் உயர வழி வகை செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.


More Stories
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க விதிமுறைகள்..
இனியாவது முயல்வோமே …
விதவிதமாய் சூரிய ஆற்றல் பயன்பாடு