July 23, 2026

விதவிதமாய் சூரிய ஆற்றல் பயன்பாடு

நமது தமிழகத்தில்
நிலவும் பருவ நிலையில் சாதகமாக சூரிய ஒளி கிடைக்கிறது. போதிய மழை கிடைப்பதும் நமது மாவட்டத்தின் சிறப்பு. சூரிய ஒளியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

*சூரிய ஆற்றல்*

சூரிய ஆற்றல் என்பது பூமியில் உள்ள அனைத்து வகையான தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும் தேவையான முதன்மை ஆற்றல் ஆகும். நமது நாட்டில் கிடைக்கும் சூரிய ஆற்றலின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. நமது நாட்டில் அதிகமாக பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 6 – 8 மணி நேரம் வரை சூரிய ஆற்றல் கிடைக்கின்றது. சூரிய ஆற்றலை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். சூரிய ஆற்றலில் கிடைக்கும் வெப்பம் என்பது ஒரு வகை. சூரிய மின்சாரம் என்பது மற்றொரு வகையாகும்.

விவசாயத்தில் சூரிய ஆற்றலின் வெப்ப பயன்பாடு பழங்காலம் தொட்டே இருந்து வருகின்றது. குறிப்பாக, வேளாண் பொருட்களை உலர்த்துவதற்கு சூரிய ஒளியில் படும்படி பரப்பி உலர்த்தி வந்தனர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது தற்கால விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

சூரியனிடமிருந்து பெறப்படும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கு சோலார் போட்டோவோல்டிக் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக, சூரிய மின் தட்டை பயன்படுத்தி சூரிய ஒளியை நேரடி மின்னோட்டமாக மாற்றுகின்றனர். பின்பு மின்சாரத்தினால் இயங்கும் கருவிகளை இயக்குவதற்கு இந்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இவ்விரு வகையான சூரிய ஆற்றல் கருவிகள் பல, தற்போது பயன்பாட்டில் உள்ளன. வேளாண்மையில் பயன்படுத்தப்படும் சூரிய ஆற்றலால் இயங்கும் நீர் இறைக்கும் பம்பு, பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொறி, மின்வேலி மற்றும் கூடார உலர்த்தி போன்றவற்றை பற்றிப் பார்ப்போம்.

*சூரிய ஒளி ஆற்றலால் இயங்கும் நீர் இறைக்கும் கருவி*

விவசாயத்தில் தண்ணீரின் பங்கு மிகவும் இன்றியமையாதது. விவசாயத்திற்குத் தேவையான நீரை ஆற்றுப்பாசனம், கிணற்றுப் பாசனம் அல்லது ஆழ்குழாய் கிணற்றுப்பாசனம் மூலமே அளிக்கப்படுகிறது. இதற்கு, நீர் இறைக்கும் மின்சார பம்புகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இப்போது விவசாயிகளின் மத்தியில் சூரிய ஒளியினால் இயங்கக்கூடிய நீர் இறைக்கும் பம்பு மிகவும் பிரபலமாகி வருகின்றது. இந்த வகை பம்பில், சூரிய மின்தட்டுகள், மின்மாற்றி, நீர் இறைக்கும் பம்பு போன்றவை முக்கியமான பாகங்களாகும். பம்பின் குதிரைத் திறனுக்கு தேவையான அளவு மின்சாரத்தை சூரிய மின்தட்டுகள் தயாரித்து வழங்கும். மேலும், சூரிய மின் தட்டுகளின் எண்ணிக்கையானது பம்பின் மின்சாரத் தேவைக்கு ஏற்ப மாறுபடும். சூரிய மின்தட்டுகளானது நேரடி மின்னோட்டத்தை மட்டுமே தயாரித்து வழங்குகின்றது. நாம் நேரடி மின்னோட்டத்தை பயன்படுத்தியோ,
மாறுதிசை மின்னோட்டத்தை பயன்படுத்தியோ நீர் இறைக்கும் பம்பை இயக்கலாம். இயங்கும் பம்பை பயன்படுத்தினால், மாறுதிசையாக்கி மிகவும் அவசியமானதாகும். மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுகின்றது. இவ்வகையான மாறுதிசையாக்கியின் பங்கானது சூரிய மின்தட்டுகளில் உற்பத்தியாகின்ற நேரடி பம்புகளின் குதிரை சக்தி திறனைப் பொறுத்து அதன் விலையும் ஒரு இலட்சத்தில் இருந்து பத்து லட்சம் ரூபாய் வரை இருக்கும். தோராயமாக ஒரு குதிரை சக்தி கொண்ட இவ்வகை நீர் இறைக்கும் கருவி மூலம், நூறு அடி ஆழ்குழாய் கிணற்றில்
இருந்து தண்ணீரை இறைக்க முடியும்.

*சூரிய சக்தி மின்வேலி*

வேளாண் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சூரிய மின்வேலியை பயன்படுத்தலாம். சூரிய மின்தட்டுகள், மின்கலம் மற்றும் கம்பி வேலி ஆகியவை சூரிய மின்வேலியின் பாகங்களாகும். இந்த மின்வேலியில் மின்சாரம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு சென்று கொண்டிருக்கும். இதனால் விலங்குகள் மின்வேலியை தொடும்போதும் அல்லது உள்ளே நுழையும்போது மின்சாரம் தாக்கும். அப்போது விலங்குகளை நிலைகுலைய செய்வதுடன் பயத்தை உருவாக்கி மீண்டும் வராமல் இருக்கச் செய்யும்.

சூரிய மின்வேலியில் தகுந்த கால இடைவெளி விட்டு மின்சாரம் பாய்வதால் வனவிலங்குகளுக்கு எந்தவித உயிர்சேதமும் நிகழாது. ஆனால் சில விவசாயிகள் அறியாமை காரணமாக மின்சார சக்தியை அதிகம் பயன்படுத்தினால் மனித உயிருக்கே பேராபத்து வரும்.

*சூரிய சக்தி பூச்சிபொறி*
வேளாண்மையில் விளைச்சலை குறைக்கக்கூடிய காரணிகளால் மிக முக்கியமானது பூச்சி தாக்குதல் ஆகும். இதன் காரணமாக விவசாயிகள் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முறைகளை கையாளுகின்றனர். இப்போது பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு சூரிய பூச்சி பொறி ஒரு தீர்வாக உள்ளது. இக்கருவியானது சூரிய மின்தட்டு, மின்கலம், பூச்சிகளை கவர ஒரு மின்விளக்கு மற்றும் பூச்சிகளை பிடிக்க தண்ணீர் நிரப்பிய ஒரு தட்டு ஆகிய பாகங்களை கொண்டது. பகல் நேரத்தில் சூரிய ஒளி படும்படி இக்கருவியை வைத்துவிட்டால் சூரிய மின்தட்டானது, மின்சாரத்தை தயாரித்து மின்கலத்தில் சேமிக்கிறது. இரவு நேரத்தில் கருவியின் மின்விளக்கு எரிவதற்கு தேவையான மின்சாரத்தை மின்கலத்திருந்து பெறுகின்றது. இக்கருவியிலிருந்து வரும் வெளிச்சம் பூச்சிகளை கவர்கின்றது. அப்படி வருகின்ற பூச்சிகள் மின்விளக்கிற்கு கீழே உள்ள தண்ணீர் நிரம்பிய தட்டில் விழுகின்றன. அந்த தண்ணீரில் நான்கு துளி மண்ணெண்ணெய் அல்லது எஞ்சின் ஆயில் கலந்து வைப்பதால் அதில விழும் பூச்சிகள் செத்துவிடுகின்றன. இந்த கருவி, நெல், பயறு வகைகள் மற்றும் தோட்டக்கலை

பயிர்களான தக்காளி, வெண்டை, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு ஏற்றது.இக்கருவியைக் கொண்டு அந்துப் பூச்சிகள், தத்துப் புச்சிகள்,

வண்டுகள் மற்றும் தத்துப் பூச்சிகளை கொல்லலாம். மேலும், ஒரு ஏக்கருக்கு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு கருவி போதுமானது. இதன் விலை சுமார்
4,500 ஆகும்.

*சூரிய கூடார உலர்த்தி*
வேளாண் பொருட்களில் ஈரப்பதம் பெரும்பாலும் சற்று அதிகமாகவே இருக்கும் வேளாண் பொருட்களை, உலர்த்தாமல் சேமிப்புக் கிடங்கில் பாதுகாத்து வைத்தால் பூஞ்சைகள் தாக்கி உணவுப் பொருட்களின் தரம் குறைகிறது.

அதிகப்படியான ஈரப்பதத்தை வேளாண் பொருள்களிலிருந்து நீக்குவதற்கு பல்வேறு உலர்த்தும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சூரிய ஒளி மூலம் திறந்தவெளியில் உலர்த்தும் முறையில் செலவு மிகக் குறைவாக இருந்தாலும், உலர்த்தப்படுகின்ற வேளாண் பொருட்களின் தரம் குறைவது மட்டுமில்லாமல் அதன் விலை குறைகின்றது. சூரிய உலர்த்தி வகைகளில் சூரிய கூடார உலர்த்தியானது விவசாயிகளிடையே மிக பிரபலமாக உள்ளது. இது அரைவடிவ கூடாரம் போன்ற அமைப்புடன் இருக்கும். அரை வடிவ கூடார அமைப்பு, கதவு, காற்று உள் செல்லுவதற்கான வழி. கூடாரத்திலிருந்து ஈரக்காற்று வெளியே செல்ல சிம்னி போன்ற அமைப்பு, உலர்த்தியில் உள்ள கான்கிரீட் தளம் அல்லது கரப்பு வண்ணம் பூசப்பட்ட கடப்பா கல் அமைப்பு (வேளாண் பொருட்களை பரப்பி காயவைப்பதற்கு) போன்றவை சூரிய கூடார உலர்த்தியின் முக்கிய பாகங்களாகும். அரை வடிவ கூடாரமானது புற ஊதாக்கதிர்கள் உட்புகாத பாலி எத்திலீன் (200 um தடிமன்) தாளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாலி எத்திலீன் தாளானது, குறைந்த அலை நீளங்கொண்ட சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே செலுத்தி அதிக அலை நீளங்கொண்ட ஒளிக்கதிர்களாக மாற்றுகின்றது. மேலும், அவை அதிக அலை நீளங்கொண்ட கதிர்களை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் கூடாரத்தின் உள்ளே வெப்பம் அதிகமாக இருக்கும். இதில் வெளிப்புற வெப்பநிலையைவிட கூடார உலர்த்தியின் உள்ளே வெப்பநிலையாது 10-20c அதிகமாக இருக்கும். இந்த கூடார உலர்த்தியில் கொப்பரைத் தேங்காய், கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய், பூண்டு மற்றும் அனைத்து வேளாண் பொருட்களையும் உலர்த்தலாம். சூரிய உலர்த்திகளில் உலர்த்தப்படுகின்ற வேளாண் பொருட்கள் நல்ல விலைக்கு விற்கப்படுவதால் அதிக வருமானமும் கிடைக்கின்றது. 60 அடி நீளம் × 12 அடி அகலம் × 6 அடி உயரம் கொண்ட சூரிய கூடார உலர்த்தியை அமைக்க சுமார் ரூ.2,00,000/- (கான்கிரீட் களம் நீங்கலாக) ஆகின்றது.

Dr. பா. இளங்கோவன், M.Sc., (Agri) M.B.A.,Ph.D., வேளாண்மை தோட்டகலைப் பயிர் சகுபடி ஆலோசகர்