July 26, 2026

தொழில்முனைவோர் + பயிற்சியாளர் = கிரிஜா

நாகை மாவட்டத்தில் உள்ள காடாம்தட்டி ஊராட்சி. இது நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே உள்ளது. இக் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஜா செல்வராஜ். இவருக்கு வயது 52. படித்தது என்னவோ ஆறாம் வகுப்பு வரைதான். ஆனால், உலக ஞானம், தொழில் சார்ந்த அறிவைச் சோதனை செய்து பார்த்தால், இவருக்கு முனைவர் பட்டமே அளிக்கலாம். அவ்வளவு விஷய ஞானம்.

இப் பெண்மணி சிறுதானியங்களை கொண்டு பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து, உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறார். அதோடு, தாம் கற்றவற்றை பிறரும் அறிந்து, அவர்களும் தொழில்முனைவோராக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு பயிற்சியாளராகவும் திகழ்கிறார்.

2019 ஆம் ஆண்டில் மகளிர் குழுவில் சேர்ந்த பின்னர், சிறுதானியங்கள் மூலமும் மீன், நண்டு உள்ளிட்ட கடல் சார்ந்த உயிரினங்களைக் கொண்டும் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிப்பது குறித்துக் கற்றறிந்தார்.

இதற்கு கிரிஷ் விஞ்ஞான் கேந்திரா போன்ற நிறுவனங்கள், மாவட்ட அளவில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொண்டது ஆகியவை இவருக்கு உதவியாக இருந்துள்ளன. பல்வேறு பதார்த்தங்களை எப்படி தயாரிப்பது, அதில் உள்ள நுணுக்கங்கள், தயாரித்த பொருள்களை எவ்வாறு விற்பனை செய்வது, எப்படி சிப்பமிட்டால், பொருள் கெட்டுவிடாமல் இருக்கும் என்பதை முழுமையாகக் கற்றறிந்தார். அறிவை வளர்த்துக் கொண்டார். இச் செயலே அவரை பயிற்சியாளராக மாற்றியது.

நாகை மாவட்டம், கடல் சார்ந்த பகுதி என்பதால், இங்கு மீனவப் பெண்கள் அதிகம். இவர்கள் கடலில் இருந்து பல்வேறு வகையான மீன்களைப் பிடித்துவந்து, வியாபாரியிடம் விற்றுவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு மீனைப் பதப்படுத்தி, அதை தாமே விற்பனை செய்யலாம் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. இத்தகைய மீனவப் பெண்களுக்கு அரசு ஊக்கத்தொகையுடன் பயற்சி அளித்து வருகிறார் கிரிஜா.

உதாரணமாக, நெத்திலி மீனை எடுத்துக் கொள்வோம். இந்த மீனைப் பதப்படுத்தி, சிப்பமிட்டு, வியாபாரிகளிடம்

விற்பதை விட பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யலாம். நெத்திலி மீன் கருவாடு, சூப் பொடி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம். மீனைக் கொண்டு பஜ்ஜி தயாரிக்கலாம். நண்டைப் பதப்படுத்தி, சூப் உள்ளிட்ட பல்வேறு பதார்த்தங்களைத் தயாரிக்கலாம். இவை குறித்து மீனவப் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன் என்கிறார் கிரிஜா.

இப் பெண்மணி, பயிற்சியாளராக இருப்பதோடு, தொழில்முனைவோராகவும் உள்ளார். கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி, அவற்றை சிப்பமிட்டு, பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்து வருகிறார். இப் பொருள்களைத் தயாரிப்பதற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மானியக் கடன் பெற்று

இயந்திரங்களை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார். இப் பொருள்களை எப்படி தயார் செய்வது என்பது குறித்து 20-க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்துள்ளார்.

நார்த்தங்காய் மருத்துவ குணம் கொண்டது. இதைக் கொண்டு மூலிகைப் பொடி தயாரிக்கலாம். நாங்கள் நார்த்தங்காயைக் கொண்டு இட்லிப் பொடி தயாரிக்கிறோம். குதிரைவாலி அரிசியில் பல்வேறு பதார்த்தங்கள், கேழ்வரகில் லட்டு, அல்வா உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

2025 ஆம் ஆண்டு ஹரியாணாவில் மகளிர் குழு சார்பில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் கண்காட்சியும் நடைபெற்றது. மாவட்டத்துக்கு ஒரு மகளிர் குழுவைத் தேர்வு செய்து அனுப்பினர். நாகை மாவட்டம் சார்பில் என்னைத் தேர்வு செய்து அனுப்பினர். பல்வேறு பதார்த்தங்களைத் தயார் செய்து கொண்டு, அந்த மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில்

சில நடைமுறை சிக்கல்களைச் சந்தித்தாலும், எனது தயாரிப்புகளைப் பாராட்டி, அந்த மாநில முதல்வர் கையில் எனக்கு விருது கிடைத்தது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், நாங்கள் ரயிலில் பயணித்தபோது, உடன் பயணித்த சில இளைஞர்கள், நான் தயாரித்த இட்லிப் பொடியை ரயிலில் பல பெட்டிகளுக்கும் எடுத்துச் சென்று, விற்பனை செய்து, 2000 ரூபாய்க்கும் மேல் ஈட்டித் தந்தனர். இதை நாகை மாவட்டத்துக்கு வந்து அதிகாரிகளிடம் தெரிவித்தேன். மொழி தெரியாத பகுதிக்குச் சென்று சாமர்த்தியமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறி, என்னைப் பாராட்டினர் என்று கூறும் கிரிஜாவுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் அவரது கணவர் விவசாயியான செல்வராஜ் மற்றும் அவரது மகன்.

பயிற்சியாளர் என்ற முறையில், தொழில் தொடங்குவோருக்கு அவர் கூறும் சிறிய அறிவுரை என்னவென்றால், தொழிலைத் தொடங்கியவுடன், கடன் பெற்று இயந்திரங்களை வாங்கி போட்டு விடாதீர்கள். இயந்திரங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்ட பின்னர், அவை நமக்கு உகந்தவைதானா என்பதை நன்கு புரிந்துகொண்ட பின்னர், இயந்திரங்களுக்கு ஆர்டர் செய்யுங்கள். இன்று பலர் இயந்திரங்களை முன்னரே வாங்கிவிட்டு, அவற்றால் பயனில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றாா் கிரிஜா.

பல்வேறு சவால்களைச் சந்தித்தாலும், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால், தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் கிரிஜா பெருமிதத்துடன்.

தொடர்புக்கு –
91598 96079.