விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய பெரிய வாய்ப்பாக உயிர்ம வேளாண்மை சான்று அமைந்துள்ளது. நுகர்வோரிடையே ரசாயனமற்ற உணவுப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், இந்த சான்றிதழ் விவசாயிகளுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.
செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை உரம், பயிர் சுழற்சி மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் ஒரு நிலையான வேளாண் முறை உயிர்ம வேளாண்மை . மண் வளத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்கள் சிதைவடைவதைத் தடுத்தல் மற்றும் அவற்றை மீட்டெடுத்தல், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்தல் ஆகியவை இயற்கை வேளாண்மையின் முக்கிய நோக்கங்களாகும். இயற்கை முறை விளைபொருட்களை உற்பத்தி செய்ய விரும்பும் எவரும், இயற்கை முறைச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்துகொள்வதன் மூலம் உயிர்ம வேளாண்மை சான்று பெற்று கொள்ளலாம். அரசு அங்கக வேளாண்மை (Organic Farming) சான்று பெற, விவசாயிகள் தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை Department of Seed Certification and Organic Certification இணையதளம் அல்லது அருகில் உள்ள அலுவலகத்தை அணுகிப் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழைப் பெறுவது ஒரு எளிமையான செயல்முறையாகும். இது APEDA-வின் NPOP திட்டத்தின் கீழ் அரசாங்கத்தாலோ அல்லது PGS-இந்தியா போன்ற உள்ளூர், சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலமாகவோ நிர்வகிக்கப்படுகிறது. சிறு விவசாயிகள், உள்ளூர் சந்தைகள் மற்றும் சமூக விற்பனைக்கு பிஜிஎஸ்-இந்தியா பங்கேற்பு உத்தரவாத முறை சான்றிதழைப் பெறுவது மிகவும் சிறந்தது.இயற்கை விளைபொருட்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது பெரிய தேசிய பல்பொருள் அங்காடிகளில் விற்கவோ விரும்பினால் NPOP (தேசிய இயற்கை உற்பத்தித் திட்டம் முறை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். புதிய விண்ணப்பதாரராக இருந்தால், இறுதி விளைபொருள் 100% இயற்கை என அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, நிலத்தில் எந்த செயற்கை இரசாயனங்களும் பயன்படுத்தப்படாத 3 வருட மாற்றக் காலம் பொதுவாகக் கோரப்படுகிறது.
தமிழ்நாடு இயற்கை வேளாண்மைச் சான்றளிப்புத் துறை’ (TNOCD) என்பது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள APEDA-வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அங்ககச் சான்றளிப்பு அமைப்பாகும். தேசிய இயற்கை உற்பத்தித் திட்டத்தின் (NPOP) விதிமுறைகள் மற்றும் ISO 65 தரநிலைகளின்படி, மாநிலத்தில் இயற்கை உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து சான்றளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ‘தமிழ்நாடு இயற்கை வேளாண்மைச் சான்றளிப்புத் துறை’ (TNOCD) நிறுவப்பட்டது. இத்துறை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)-வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்துறையால் சான்றளிக்கப்படும் இயற்கை வேளாண்மைப் பொருட்கள் ஐரோப்பியத் தரநிலைகளுக்கு இணையானவை மற்றும் ஏற்றுமதிக்குத் தகுதியானவை . இது விவசாய விளைச்சலுக்குப் பெரும் மதிப்பைச் சேர்க்கும். சர்வதேச சந்தைகளில் அங்ககப் பொருட்களை எளிதாக விற்க முடியும். விளைபொருட்களுக்கு சாதாரண பொருட்களை விட அதிக விலை கிடைக்கும்.

*சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்*
• தனி நபராகவோ அல்லது குழுவாகவோ (குறைந்தது 25 விவசாயிகள்) விண்ணப்பிக்கலாம். உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, பதிவு கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணத்தை அரசு நிர்ணயித்த கணக்கில் செலுத்த வேண்டும்.
• விண்ணப்பத்துடன் பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முடிவுகள், மற்றும் இயற்கை இடுபொருட்கள் வாங்கிய ரசீதுகள், பயிர் சாகுபடி பதிவேடுகள், ஆண்டு பயிர் திட்டம் ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
• அங்ககச் சான்றளிப்புத் துறை அதிகாரிகள் சான்றளிப்புக் குழு பண்ணைக்கு நேரில் வந்து, அங்கக உற்பத்தி முறைகள் NPOP (National Programme for Organic Production) அல்லது PGS (Participatory Guarantee System) தரநிலைகளின்படி உள்ளதா எனச் சோதனை செய்வார்கள்.
• இயற்கை முறைக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட ‘மாறுதல் காலம்’ தேவைப்படும். பொதுவாக, ஆண்டுப் பயிர்களுக்கு 3 ஆண்டுகள் வரை இயற்கை வேளாண்மை நடைமுறைகளை முறையாகப் பின்பற்றி சான்றுகளைப் பராமரிக்க வேண்டும்.
• அதிகாரிகளின் ஆய்வறிக்கைகள் திருப்திகரமாக இருந்தால், அங்கக வேளாண் உற்பத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் உரிய ஆய்வுடன் புதுப்பிக்க வேண்டும்.
கட்டண விவரங்கள்
தனிநபர் பதிவின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.500-ம், பிற விவசாயிகளுக்கு ரூ.1000-ம் பதிவுக்கட்டணமாகவும்; அத்துடன் ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.1000-ம், பயணச் செலவிற்காக ரூ.200-ம் செலுத்தப்பட வேண்டும். குழுச் சான்றளிப்பிற்கு, பதிவுக்கட்டணமாக ரூ.5000-ம், ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.1000-ம், பயணச் செலவிற்காக ரூ.200-ம் செலுத்தப்பட வேண்டும். அதேபோன்று, பெருநிறுவனத் துறைக்கு பதிவுக்கட்டணமாக ரூ.5000-ம், ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.2000-ம், பயணச் செலவிற்காக ரூ.400-ம் வசூலிக்கப்படுகிறது. அனைத்துப் பயிர்களும் இயற்கை முறைச் சான்றளிப்பைப் பெறலாம்.
*தொடர்பு கொள்ள வேண்டிய இடம்*
தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (TNOCD) அலுவலகங்களைத் தங்கள் மாவட்டத்திலோ அல்லது தமிழ்நாடு விதைச் சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை இணையதளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்: கா.அரிபுத்திரன் எம்.எஸ்.சி அக்ரி ,வேளாண்மை அலுவலர் ,உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் , விருதுநகர்- 8248080922

More Stories
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க விதிமுறைகள்..
இனியாவது முயல்வோமே …
வேளாண் ஏற்றுமதியில்தேவைப்படும்கொள்கை மாற்றங்களும், சந்தை அளவிளான விரிவாக்க முயற்சிகளும்